பழனியில் 24 அடி வேல் சிலையை அதிகாரிகள் அகற்றியதால் பக்தர்கள் அதிர்ச்சி...!


பழனியில் 24 அடி வேல் சிலையை அதிகாரிகள் அகற்றியதால் பக்தர்கள் அதிர்ச்சி...!
x

பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு வழிபாட்டிற்காக நிறுவப்பட்டிருந்த சுமார் 24 அடி உயரமுள்ள வேல் சிலையை அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

பழனி சண்முகநதியில் தூய்மைப்பணி மற்றும் சண்முகநதி ஆராத்தி நிகழ்ச்சிகளை பல்வேறு தன்னார்வ அமைப்புகள் கடந்த நான்கு ஆண்டுகளாக செய்து வருகின்றன. அதே போன்று தைப்பூசத்தின் போது சுமார் 24 அடி உயரமுள்ள பித்தளையினாலான வேல் சிலையை அங்கு வைத்து திருவிழா முடிந்த பின் அகற்றுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் வேல்சிலை அங்கு வைக்கப்பட்டது.

தைப்பூசத் திருவிழா வருகின்ற 7ம் தேதி முடிந்த பின்னர் இந்த சிலையை அகற்றி விடுவதாக வழிபாட்டுக் குழுவினர் தெரிவித்திருந்தனர். எந்தவித பிரச்சினையும் இன்றி வழக்கம்போல வழிபாடுகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாலைக்குள் வேல் சிலையை அகற்ற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அதிகாலை அந்த சிலை அகற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிக்கை அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை வேல்சிலை பலத்த காவல் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. ஜேசிபி, கிரேன் உதவி கொண்டு சிலையின் பீடம் தகர்க்கப்பட்டு சிலை பிரித்து எடுத்து லாரியில் ஏற்றி காவல் துறையினர் கொண்டு சென்றனர். வழிபாட்டுக்காக நிறுவப்பட்டிருந்த வேல் சிலை திடீரென அகற்றப்பட்டதை அங்கிருந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.


Next Story