மகாலட்சுமி அம்மன் கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


மகாலட்சுமி அம்மன் கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
x

மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கரூர்

மகாலட்சுமி அம்மன் கோவில்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டு மகாதானபுரத்தில் பிரசித்தி பெற்ற மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு ஆடிப்பெருக்கு திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையடுத்து அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் இரவு தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. விடிய, விடிய அம்மன் திருவீதி உலா வந்து கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோவில் முன்புறம் உள்ள கொடி மரத்தில் விளக்கேற்றப்பட்டது. அப்போது பூசாரி பெரியசாமி ஆணிகால் செருப்பு அணிந்து சிறப்பு பூஜைகள் செய்தார்.

தேங்காய் உடைத்த நேர்த்திக்கடன்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கோவில் முன்பு பக்தர்கள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டனர். அப்போது பூசாரி பெரியசாமி அருள்வந்து ஆடி, வரிசையாக உட்கார்ந்து இருந்த பக்தர்களி ன் தலையில் தேங்காய் உடைத்தார். தேங்காய் உடைந்து சிதறிஓடின. மொத்தம் 539 பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டன.இதற்கான ஏற்பாடுகளை அறநிலைய துறையினர், விழா கமிட்டியினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் முருகன், குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் ஜோதி ஆகியோர் கொண்ட குழுவினர் செய்திருந்தனர்.


Next Story