தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வினோத வழிபாடு


செல்லுகுடி வீரலட்சுமி அம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையால் அடி வாங்கியும் நூதன வழிபாடு செய்தனர்.

புதுக்கோட்டை

வீரலட்சுமி அம்மன் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம் செல்லுகுடியில் பிரசித்தி பெற்ற வீரலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. புதுக்கோட்டையில் மன்னர் ஆட்சி செய்த காலத்தில் தொண்டைமான் மன்னர்களின் குலதெய்வமாக விளங்கும் புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவில் கட்டுவதற்கு செல்லு குடிமக்களின் பங்களிப்பு அதிகளவில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீரலட்சுமி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை சர்வ அலங்காரத்தில் வீரலட்சுமி அம்மன், செல்லாயி மற்றும் பேராயி ஆகிய தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்து நான்கு வீதிகளிலும் வீதியுலா வந்தனர். அப்போது பெண்கள் முளைப்பாரி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தலையில் தேங்காய் உடைப்பு

இதையடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் முன்பு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களை வரிசையாக அமர வைத்து கோவில் பூசாரி பக்தர்களின் தலையில் தேங்காயை உடைத்தார். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் மீது பேய், பில்லி சூனியம் உள்ளிட்டவை நீங்கி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக பூசாரியிடம் சாட்டை அடியும் பெற்றுக் கொண்டனர்.

இதுபோன்ற வினோத வழிபாடு கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் தலையில் தேங்காய் உடைக்கும் போதும், சாட்டையடி வழிபாடு நடக்கும்போதும் பக்தர்கள் ஒருவருக்கு கூட இதுவரை காயம் ஏற்பட்டது கிடையாது என்பது இதன் சிறப்பு என்று பக்தர்கள் தெரிவித்தனர்.


Next Story