ரோட்டில் குடிநீருடன் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்


ரோட்டில் குடிநீருடன் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்
x
திருப்பூர்

திருப்பூர்:

திருப்பூர் குமரன் சிலை அருகே ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் குடிநீருடன் கலந்து பாயும் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

குளம்போல் கழிவுநீர்

திருப்பூர் குமரன் சிலை அருகே, இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் உள்ளது. இதன் முன்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்கம்பம் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. அப்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் ரெயில் நிலையத்தில் இருந்து வரும் கழிவுநீர் குழாயிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிநீரும், கழிவுநீரும் கலந்து இந்த ரோட்டில் ஆறு போல பாய்ந்து கொண்டிருக்கிறது.

தினமும் அதிக அளவிலான குடிநீர் யாருக்கும் பயனின்றி வீணாகி வருகிறது. இதேபோல் கழிவுநீரும் பாய்வதால் இந்த ரோட்டில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. தொடர்ச்சியாக குடிநீரும், கழிவு நீரும் பாய்ந்து கொண்டிருப்பதால் இந்த ரோட்டில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஒரு வாரத்திற்கு மேலாகிய பின்னரும் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைக்கப்படாமல் உள்ளது.

வாகன ஓட்டிகள் அவதி

தற்போது ரோட்டின் பெரும் பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள்சிரமப்படுகின்றனர். இந்த பகுதியில் ரெயில் நிலையம், காதர்பேட்டை வளாகம் ஆகியவை இருப்பதாலும், நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி ஆகிய இரண்டு பெரிய பள்ளிகள் இருப்பதாலும் இந்த ரோட்டில் எப்போதும் வாகனப்போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

இதேபோல் காலேஜ் ரோடு, ராயபுரம், சூசையாபுரம், கல்லம்பாளையம், ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்டசுற்றுவட்டார பகுதியினரும் இந்த ரோட்டை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த ரோடு வழியாக செல்லும் நிலையில், ரோட்டில் குளம் போல் கழிவுநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கழிவுநீர் அபிஷேகத்துக்குள்ளாகின்றனர். எனவே அதிகாரிகள் இதை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?.


Next Story