மாணவி ஸ்ரீமதி மரணம்; நீதி கேட்டு போராடிய மாணவர்கள், இளைஞர்களை விடுதலை செய்யவேண்டும் - சரத்குமார்


மாணவி ஸ்ரீமதி மரணம்; நீதி கேட்டு போராடிய மாணவர்கள், இளைஞர்களை விடுதலை செய்யவேண்டும் -  சரத்குமார்
x

மாணவி மரணம் தொடர்பாக நீதி கேட்டு போராடிய மாணவர்கள், இளைஞர்களை விடுதலை செய்யவேண்டும் என சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக, மாணவியின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் உள்பட பொதுமக்கள் நீதி கேட்டு பள்ளி வளாகத்தில் போராடியதில், கடந்த 17-ந்தேதி விரும்பத்தகாத நிகழ்வாக வன்முறை வெடித்தது துரதிர்ஷ்டவசமானது.

வன்முறை எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வாகாது. நமது காந்திய தேசத்தில் அறவழியில் அயராது போராடினால் நிச்சயம் நீதி நிலைக்கப்பெறும்.அரசை பொறுத்தவரை, இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களின் உரிமைக்காக போராடுவதற்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தை, முறையின்றி பயன்படுத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களையும், வன்முறைக்கு தூண்டியவர்களையும் கண்டறிந்து தண்டிப்பது நியாயம் தான்.

ஆனால், அதேசமயம் மாணவியின் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்கப்பெற களத்தில் போராடிய மாணவர்களும், இளைஞர்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடுமையான முறையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக வருகிற செய்தி வேதனையளிக்கிறது.

போராட்ட சமயத்தில் காவல்துறையினர் சற்றே முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம். எனவே இருபுறமும் நடந்தேறியவற்றை கவனத்தில்கொண்டு தமிழக அரசு, மாணவி ஸ்ரீமதி விவகாரத்தில் கைது செய்த மாணவர்கள், இளைஞர்களின் கல்வி, எதிர்கால நலன் பாதிக்காதவாறு அவர்களை எச்சரித்து, விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story