மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில்இலை கருகல் நோயால் நெற்பயிர்கள் பாதிப்புவிவசாயிகள் கவலை


மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில்இலை கருகல் நோயால் நெற்பயிர்கள் பாதிப்புவிவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 14 Aug 2023 6:45 PM GMT (Updated: 14 Aug 2023 6:46 PM GMT)

மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் இலை கருகல் நோயால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

இலை கருகல் நோய்

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள லக்கிநாயக்கன்பட்டி, புதுப்பட்டு, பாக்கம், கடுவனூர், கானாங்காடு, சவேரியார்பாளையம், மைக்கேல் புரம், மேல்சிறுவள்ளூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் நெல் சாகுபடி செய்து பராமரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற் பயிர்கள் தற்போது மஞ்சள் நிறத்தில் காணப்படுவது மட்டுமல்லாமல் இலை கருகல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் குறித்த நேரத்தில் கதிர்கள் வராமல் உள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்

இதுகுறித்து கடுவனூர் கிராம விவசாயிகள் கூறுகையில், பெரும்பாலும் 3 மாத பயிரான நெல்லை நடவு செய்து பராமரித்து வருகிறோம். தற்போது கடுவனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற் பயிர்கள் முழுவதும் மஞ்சள் நிறமாக காணப்படுவதுடன், இலை கருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான நெற் பயிர்கள் அதன் சோகை காய்ந்த நிலையில் வளர்ச்சி இன்றி காணப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட என்னை போன்ற விவசாயிகள் இலைகருகல் நோய்க்கு தீர்வு காண ஏதுவாக பாதிக்கப்பட்ட நெல் வயல்களை நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்க கோரி வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு பலமுறை முறையிட்டோம். ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை நேரடியாக சென்று ஆய்வு செய்து, மருந்துகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றனர்.


Next Story