தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

சாலைகளை அகலப்படுத்த கோரிக்கை

ஜெயங்கொண்டம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 20 ஆண்டுகள் ஆக போகிறது. ஆனால் நகர் பகுதி சாலைகள் தற்போதுள்ள போக்குவரத்துக்கு ஏற்றாற்போல் இல்லை. ஆக்கிரமிப்புகள், அகலம் குறைந்த சாலைகள், கட்டுப்பாடின்றி சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் போன்றவற்றால் ஜெயங்கொண்டம் நகர் பகுதிக்குள் வாகனம் ஓட்டுவது மிகவும் கடினமாகிறது. சாலைகளை அகலப்படுத்தி மையத்தடுப்பு கட்டைகள் அமைத்து போக்குவரத்தை சீர் செய்யவும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதை சீர் செய்யவும், கனரக வாகனங்கள் நான்கு ரோடு பகுதியில் வளையமுடியாமல் சிரமப்படுவதால் திருச்சி சாலையையும், விருத்தாசலம் சாலையையும் இணைக்க புறவழிச்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

அரவிந்த், ஜெயங்கொண்டம்

வாகன ஓட்டிகள் அவதி

அரியலூர் நகரப்பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள், பெண்களை கடிக்க வருகிறது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை கடிக்க வருவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பலர் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ெபாதுமக்கள், அரியலூர்

குப்பை தொட்டிகளாக மாறிய பாதாள சாக்கடை மூடிகள்

அரியலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. வாகனங்கள் அதிகம் செல்லும் சாலைகளில் பாதாள சாக்கடை மூடிகள் உடைந்து போய் விடுகின்றன. இவைகளை நகராட்சி பணியாளர்கள் அடிக்கடி மாற்றி வந்தார்கள். நகராட்சியின் 9-வது வார்டு கல்லூரி சாலையில் பல இடங்களில் சாலையின் உயரம் அதிகமானதால் சாக்கடை மூடிகள் உள்பகுதி பள்ளமாய் போய்விட்டது. இதனை மாற்றுவதற்காக அதற்கு வேண்டிய உபகரணங்களை சாலையின் ஓரத்தில் போட்டு பல மாதங்கள் ஆகியும் எந்த பணியும் நடைபெறவில்லை. அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து பலர் குப்பைகளை அதில் போட்டு வருகின்றனர். இதனால் பாதாள சாக்கடை மூடிகள் குப்பைதொட்டியாக மாறி உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், அரியலூர்

வேகத்தடை சீரமைக்கப்படுமா ?

அரியலூர் மாவட்டம், வி. கைகாட்டியில் சிதம்பரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.முத்துவாஞ்சேரி சாலையில் சென்டர் மீடியன் அமைந்துள்ளது. இதனையொட்டி மேற்கு புற சாலை வழியாக 24 மணி நேரமும் எண்ணற்ற கனரக வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் அடிக்கடி இங்கு விபத்துக்கள் நிகழும் சூழல் உள்ளது.இதை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு இங்கு வேகத்தடை அமைக்கப்பட்டது. மேற்படி வேகத்தடை வழியாக எண்ணற்ற கனரக வாகனங்கள் சென்று வருவதால் சிதிலமடைந்து சாலையும், வேகத்தடையும் ஒரே மாதிரி உள்ளது. அதில் எவ்வித வெள்ளை நிறபட்டைகளும் இல்லை. இதனால் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடையை சீரமைத்து தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், வி.கைகாட்டி

குப்பை மேடாக மாறிவரும் சுடுகாடு

அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சியில் சிறுகடம்பூர் சாலையில் சுடுகாடு ஒன்று உள்ளது. இந்த சுடுகாட்டில் கோழி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், ஓட்டல்களில் வீணான உணவுகளை அதிகளவில் கொட்டி வருகின்றனர். இதனால் சுடுகாடு குப்பை கிடங்காக மாறி வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், இரும்புலிக்குறிச்சி


Next Story