தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

மரக்கிளைகளில் உரசி செல்லும் மின்கம்பிகள்

திருச்சி மாவட்டம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி கணபதிபாளையம் பஸ் நிலையத்தின் அருகே அரசு மரத்தின் கிளைகளில் மின்கம்பிகள் உரசி செல்கிறது. தற்போது மழை, காற்று அதிகளவில் வீசுவதால் அவ்வபோது தீப்பொறிகளுடன் மின்தடையுடம் ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியசாமி, கணபதிபாளையம்.

தேங்கி நிற்கும் தண்ணீர்

உப்பிலியபுரம் ஒன்றியம் தளுகை ஊராட்சி டி.முருங்கப்பட்டி பிள்ளையார் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தி ஆவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், டி.முருங்கப்பட்டி

சுற்றுச்சுவர் கட்டித்தர கோரிக்கை

உப்பிலியபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்பக்க சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. இதனால் இங்கு இரவில் தங்கும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றுச்சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

பொதுமக்கள், உப்பிலியபுரம்.

சிதிலமடைந்த நுழைவுவாயில்

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த பச்சாம்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள பழங்கால போர்ச்சின்னம் நுழைவுவாயில் கடந்த 10.8.2022 அன்று ரூ.7 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த நுழைவுவாயில் ஓராண்டுக்குள் மீண்டும் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நுழைவு வாயில் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பச்சாம்பேட்டை, திருச்சி

குண்டும், குழியுமான சாலை

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் முதல் லால்குடி செல்லும் சாலை வழியாக தினசரி 300-க்கும் மேற்பட்ட நகரபஸ்கள், தொலைதூரப் பஸ்கள் சென்று வருகின்றன. இதில் டோல்கேட் சிக்னலில் இருந்து முதல் 200 மீட்டர் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக அபாயகரமாக மரணப் பள்ளங்கள் மனிதனின் உயிரை எடுக்க காத்திருக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள், குறிப்பாக பெண்கள் வாகனத்தை ஓட்டும்போது பெரும் இன்னல்களுக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருச்சி.


Next Story