தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

ஆபத்தான மின்கம்பங்கள்

கரூர் மாவட்டம், வாங்கல் காவிரி ஆற்றுக்கு செல்லும் பாதையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் 2 மின்கம்பங்களிலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமாலும் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இந்த மின்மாற்றி விழுந்தால் உயிர் இழப்பு கூட ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பங்களை மாற்றி புதிய கம்பங்கள் நட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பாலசந்திரன். வாங்கல்.

சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்

கரூர்- கோவை சாலை வழியாக தினமும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பஸ்கள், லாரிகள் உள்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. கரூர்-கோவை சாலையில் முனியப்பன் கோவில் அருகே வேகத்தடை உள்ளது. இந்த வேகத்தடை பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் அப்பகுதியில் செல்லும்போது நிலை தடுமாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சேதுமடைந்த இந்த சாலை பகுதியை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கரூர்.

குகை வழிப்பாதை அமைக்க வேண்டுகோள்

கரூர் மாவட்டம், மரவாபாளையம் வழியாக ரெயில்வே இரும்பு பாதை செல்கிறது .இந்த பாதையின் அருகாமையில் நாடார்புரம் ,காந்தி நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் மரவாபாளையம் மெயின் ரோட்டிற்கு வருவதற்கு அந்த வழியாக செல்லும் ரெயில்வே இரும்பு பாதை வழியாக செல்ல வேண்டியுள்ளது .அதேபோல் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் இந்த பாைத வழியாகத்தான் சென்று வருகின்றனர். இப்பகுதியில் உள்ளவர்களுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனால் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சென்று ஆம்புலன்ஸ் வர வேண்டிய சூழ்நிலை உள்ளது . பகல் மற்றும் இரவு நேரங்களில் இந்த வழியாக ரெயில் அதிவேகமாக வருவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே மரவாபாளையம் ரெயில்வே பாதைக்கு அடியில் குகை வழிப்பாதை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மரவாபாளையம்.

வேகத்தடையில் வெள்ணை வர்ணம் பூச கோரிக்கை

கரூர் மாவட்டம் பாலத்துறை புகளூர் வாய்க்கால் அருகே வாகனங்கள் மெதுவாக சென்று தேசிய நெடுஞ்சாலையில் வழியாக செல்வதற்காக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக கரூர் பகுதியில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் டவுன் பஸ்கள், ஈரோடு, கோவை, கொடுமுடி, காங்கேயம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பரமத்தி வேலூர், நாமக்கல், பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள், டிராக்டர்கள்,இரு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் இரவு பகலாகசென்று வருகின்றன. இந்நிலையில் அங்கு போடப்பட்டுள்ள வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசாமல் இருப்பதால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகனங்கள் நிலைத்திடுமாறி செல்கின்றன. சில நேரங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி விழுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், பாலத்துறை.

பயணிகள் நிழற்குடை கட்டப்படுமா?

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் இருந்து கரூர் செல்லும் வழியில் சமத்துவபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஜவுளி பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவிற்கு தினமும் கரூர், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, மலைக்கோவிலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பூங்காவிற்கு வருவபவர்கள் மீண்டும் பஸ் ஏறி செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று சென்று வருகின்றனர். எனவே பூங்காவின் முன்பு பயணியள் நிழற்குடை கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், அரவக்குறிச்சி.


Next Story