தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை

திருவெறும்பூர் டி.நகர் முல்லை வாசன் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருவெறும்பூர்.

கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படுமா?

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம் திருவெள்ளறை ஊராட்சி தேரோடும் வீதியில் உள்ள கழிவுநீர் செல்லும் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் கொசுத்தொல்லை மற்றும் துர்நாற்றம் வீசி, நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீா் கால்வாயை சுத்தம் செய்ய ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ரங்கராஜன், திருவெள்ளறை.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

துறையூர் தாலுகா, கொப்பம்பட்டி வடக்கு அரசமரம் பஸ் நிறுத்தமானது கடைகள் மற்றும் வாகனங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கடையில் மது மற்றும் புகையிலை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் கூட்டமாக இருப்பதால் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது. இதனால் தெருவில் சிறுவர், சிறுமிகளை விளையாட அனுப்ப முடிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பில் அகப்பட்டுள்ள பஸ் நிறுத்தத்தை மீட்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

செல்வி, கொப்பம்பட்டி.

கலங்கலாக வரும் குடிநீர்

லால்குடி தாலுகா கல்விக்குடி கிராமத்தில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. இதனால் இந்த தொட்டியில் இருந்து வினியோகம் செய்யப்படும் குடிநீரானது கலங்கலாக வருகிறது. இதனை குடிப்பதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடல்நிலை சரி இல்லாமல் போகிறது. மேலும் சில நேரங்களில் குடிநீரானது உப்புநீர் போல் வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கல்விக்குடி.

மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

ஶ்ரீரங்கம் தாலுகா, பூலாங்குளத்து பட்டி பஸ் நிறுத்தம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போதிய அளவிலான மின்விளக்குகள் இல்லை. இதனால் மாலை நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் விபத்து ஏற்படுகிறது. இதனால் உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே போதிய அளவிலான மின்விளக்குகள் அமைத்து பொதுமக்களை ஆபத்தில் இருந்து காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தியாகராஜன், ராம்ஜி நகர்.

குடிநீர் குழாய் சரிசெய்யப்படுமா?

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம், ராஜாகாலனி செல்லும் வ.உ.சி சாலையில் கடந்த ஒரு மாதமாக தனியார் குடியிருப்பு முன்பு உள்ள மின்கம்பத்தை சுற்றிலும் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. சில நாட்களுக்கு முன்பு இந்த குழாய் சீர் செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மின்கம்பம் சாய்ந்து அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ராஜாகாலனி.

வீணாகும் குடிநீர்

திருச்சி பெரியமிளகுபாறை, கள்ளர் தெருவில் கடந்த சில நாட்களாக சாலையோரம் உள்ள குடிநீர் குழாய் உடைந்து அதிகமான குடிநீர் சாக்கடை வாய்க்காலில் கலந்து வீணாகிறது. இதனால் மேடான பகுதிக்கு தண்ணீர் குறைவாக வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராஜா, பெரியமிளகுபாறை.


Next Story