'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 21 Dec 2022 6:45 PM GMT (Updated: 21 Dec 2022 6:45 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9176128888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 9176128888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பயணிகளுக்கு இருக்கை வசதி தேவை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பஸ் நிலையத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பஸ் நிலையம் முன்பாக சாலையோரம் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றனர். அங்கு போதிய இருக்கைகள் இல்லாததால் பயணிகள் நீண்ட நேரம் பஸ்சுக்காக வெயிலிலும், மழையிலும் காத்து நிற்கும் அவலநிலை உள்ளது. எனவே அங்கு போதிய இருக்கைகளுடன் நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

பகலில் ஒளிரும் மின்விளக்குகள்

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்புள்ள உயர்கோபுர மின்விளக்குகள் தினமும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையிலும் தானாக எரிந்து அணையும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த மின்விளக்குகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பகலில் எரிந்து விட்டு மாலையில் அணைந்து விடுகிறது. இதனால் பகலில் தேவையின்றி ஒளிர்ந்து மின்விரயத்தை ஏற்படுத்தும் மின்விளக்குகள் இரவில் அணைந்து விடுவதால் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே மின்விளக்குகள் மீண்டும் இரவில் ஒளிரும் வகையில் மாற்றி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-மாரிமுத்து, பெருமாள்நகர்.

பஸ் வசதி தேவை

தெற்கு வள்ளியூர் கிராமத்துக்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, புறவழிச்சாலையில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். ஆகையால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தெற்கு வள்ளியூர் வழியாக பஸ்கள் இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-பிரபாகரன், தெற்கு வள்ளியூர்.

காட்சிப்பொருளான உழவர் சந்தை

நெல்லை டவுன் கண்டிகைபேரியில் உள்ள உழவர் சந்தை பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே அதனை மீண்டும் திறந்து, அங்கு விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-ஜெய்னுல் ஆப்தீன், நெல்லை டவுன்.

நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

நெல்லையில் இருந்து மூலைக்கரைப்பட்டி, கடம்பன்குளம் வழியாக சாத்தான்குளத்துக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் கடந்த சில நாட்களாக இயக்கப்படவில்லை. இதேபோன்று வள்ளியூரில் இருந்து மூலைக்கரைப்பட்டி, கடம்பன்குளம் வழியாக காரியாண்டிக்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ்சும் கடந்த சில நாட்களாக இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

-மணிகண்டன், கடம்பன்குளம்.

புகாருக்கு உடனடி தீர்வு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம் மணியாச்சி ரோடு சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று உதயராஜன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அங்கு வேகத்தடை அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

வீணாகும் குடிநீர்

கோவில்பட்டி புது ரோடு செல்லப்பாண்டியன் தெரு முகப்பு, கடலைக்கார தெரு எதிர்புறம் உள்ள முகப்பு ஆகிய பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய் வால்வு தொட்டிகளில் இருந்து தண்ணீர் கசிந்து சாலையில் தண்ணீர் வீணாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலை சேதமடைவதுடன் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-பாலமுருகன், கோவில்பட்டி.

குண்டும் குழியுமான சாலை

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் இருந்து தட்டப்பாறை வழியாக புதுக்கோட்டை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ராஜேஷ், புதியம்புத்தூர்.

* சாத்தான்குளம் அருகே புளியங்குளம் விலக்கில் இருந்து புளியங்குளம் ஊருக்குள் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சுமார் 1½ கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சாலை முழுவதும் ராட்சத பள்ளங்களாக உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-ஆடம்ஸ், சாத்தான்குளம்.

சாலையோரம் குவிந்த குப்பைகள்

சாயர்புரம் அருகே சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்து தங்கம்மாள்புரம் ஊருக்கு மேற்கு பகுதியில் சாலையோரம் குப்பைகளை கொட்டுகின்றனர். அந்த குப்பைகள் காற்றில் பறந்து சாலை முழுவதும் குப்பைக்கூளமாக காட்சியளிக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்றி தூய்மையாக பராமரிக்கவும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக மாற்று இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-ஜெபஸ்டின், தங்கம்மாள்புரம்.

புதிய மின்பெட்டி அமைப்பு

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் திருமலையப்பபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மின்பெட்டி மூடி இல்லாமல் திறந்தே கிடப்பதாக திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து மின்கம்பத்தில் மூடியுடன் புதிய மின்பெட்டி அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

நவீன கழிப்பறை திறக்கப்படுமா?

சுரண்டை பஸ் நிலைய வளாகத்தில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தில் நவீன கழிப்பறை கட்டிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனாலும் அதனை திறந்து பயன்படுத்தாமல் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே பயணிகளின் பயன்பாட்டுக்கு நவீன கழிப்பறையை திறப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-ஞானசேவியர், சுரண்டை.

குண்டும் குழியுமான சாலை

கடையம் யூனியன் மந்தியூர் பஞ்சாயத்து வாகைகுளம் பகுதியில் உள்ள பேவர்பிளாக் சாலையின் நடுவில் குழி தோண்டி குடிநீர் குழாய் பதித்தனர். பின்னர் சாலையை சீரமைக்காததால் குண்டும் குழியுமாக உள்ளது. எனவே சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-முருகன், நாணல்குளம்.

சுகாதாரக்கேடு

பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் குப்பைகள் குவிந்து சுகாதாரக்கேடாக காட்சியளிக்கிறது. எனவே அங்கு குப்பைகளை அகற்றி தூய்மையாக பராமரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-ஜோசப் ரத்தினம், பாவூர்சத்திரம்.

ஆபத்தான கிணறு

கீழப்பாவூர் யூனியன் பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து அருந்ததியர் நகரில் குடியிருப்புகளின் அருகில் பயன்பாடற்ற தரைமட்ட கிணறு உள்ளது. அதில் யாரேனும் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான கிணற்றைச் சுற்றிலும் தடுப்புச்சுவர் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-பொன்சேகர், பெத்தநாடார்பட்டி.


Next Story