'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 4 Dec 2022 6:45 PM GMT (Updated: 4 Dec 2022 6:45 PM GMT)

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பள்ளிக்கூடம் முன்பு தேங்கிய மழைநீர்

ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து கீழ விஜயாபதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார துணை நிலையம் முன்பாக மழைநீர் குளம் போன்று தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அங்கு மழைநீர் தேங்காத வகையில் பேவர்பிளாக் சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-ரூபான், கீழ விஜயாபதி.

பஸ் நிறுத்தம் அமைக்கப்படுமா?

அம்பை தாலுகா தெற்கு அகஸ்தியர்புரத்தில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கட்டப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது. அங்கு பஸ் நிறுத்தம் இல்லாததால், பொதுமக்கள் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சார்பதிவாளர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே சார்பதிவாளர் அலுவலகம் முன்பு பஸ் நிறுத்தம் அமைத்து பயணிகள் நிழற்கூடம் கட்டித் தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?

-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

சேறும் சகதியுமான சாலை

நெல்லை டவுன் தென்பத்து செல்லும் சாலையில் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி அருகில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது பெய்த மழையில் சாலை முழுவதும் சேறும் சகதியுமாக உருக்குலைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-மாரியப்பன், தென்பத்து.

கிடப்பில் போடப்பட்ட குடிநீர் இணைப்பு பணி

சேரன்மாதேவி யூனியன் தெற்கு வீரவநல்லூர் பஞ்சாயத்தில் வீடுகள்தோறும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக தெருக்களில் பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால், அந்த வழியாக நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை விரைந்து நிறைவேற்றி, பள்ளத்தை மூடி சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ராமச்சந்திரன், தெற்கு வீரவநல்லூர்.

வேகத்தடை அவசியம்

நெல்லை மாவட்டம் மானூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-இசக்கிமுத்து, மானூர்.

* நெல்லை டவுன் வழுக்கோடை பகுதியில் இருந்து தென்காசி செல்லும் மெயின் ரோட்டில் பள்ளிக்கூடங்கள் அருகில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வேகத்தடைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

-ஜெய்னுல் ஆப்தீன், நெல்லை.

சேதமடைந்த ரேஷன் கடை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ்நகர் வென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள ரேஷன் கடையில் கான்கிரீட் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. இதனால் ரேஷன் கடைக்கு பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சேதமடைந்த ரேஷன் கடையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-சுந்தர், பாவூர்சத்திரம்

கால்நடைகளின் கூடாரமாக மாறிய சமுதாய நலக்கூடம்

வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி தென்புறம் புதிய சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படவில்லை. இதனால் சமுதாயக்கூட வளாகத்தில் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்ததால், கால்நடைகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே காட்சிப்பொருளான புதிய சமுதாய நலக்கூடத்தை திறந்து மக்களின் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-பெருமாள், வாசுதேவநல்லூர்.

தரைமட்ட கிணறுக்கு மூடி அமைக்கப்படுமா?

சங்கரன்கோவில் தாலுகா கலப்பாகுளம் பஞ்சாயத்து புளியம்பட்டி கீழ தெருவில் ஊர் பொதுகிணறு பல ஆண்டுகளாக பயன்பாடற்று குப்பைத்தொட்டியாக மாறி வருகிறது. தரைமட்டமாக உள்ள இந்த கிணறு மிகவும் ஆழமாக உள்ளது. மேலும் இதன் அருகில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த கிணற்றுக்குள் கால்நடைகள் தவறி விழுகின்றன. எனவே ஆபத்தான கிணற்றின் சுற்றுச்சுவரை உயர்த்தி அமைத்து, இரும்பாலான மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-வேல்முருகன், புளியம்பட்டி.

குண்டும் குழியுமான சாலை

கடையம் அருகே திருமலையப்பபுரத்தில் இருந்து கோவிந்தபேரி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் உள்ள ராட்சத பள்ளங்களில் மழைநீர் குளம் போன்று தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-திருக்குமரன், கடையம்.

ஆபத்தான மின்கம்பம்

செங்கோட்டை அருகே கண்ணுப்புளிமெட்டு மெயின் ரோட்டில் ஏ.ஜி.தொடக்கப்பள்ளி அருகில் உள்ள மின்கம்பத்தின் உச்சியில் கான்கிரீட் பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-ராஜீவ்காந்தி, செங்கோட்டை.

* தென்காசி அருகே குணராமநல்லூர் பஞ்சாயத்து புல்லுக்காட்டுவலசை பால்பண்ணை தெருவில் வாறுகாலுக்குள் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

அகிலன், குணராமநல்லூர்.


Next Story