'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வெள்ளையத்தேவன் மணிமண்டபம் எதிரே மின்மாற்றி ஒன்று உள்ளது. அந்த மின்மாற்றியின் கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து மிகவும் அபாய நிலையில் இருப்பதாக வசவப்பபுரத்தை சேர்ந்த வாசகர் கணேசன் என்பவர், 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக மின்மாற்றியின் கம்பம் சீரமைக்கப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மின்விளக்கு வசதி தேவை

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி தாமிரபரணி ஆற்றுப்பாலம் வழியாக முக்கூடல், நெல்லை, ஆலங்குளம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. ஆனால் ஆற்றுப்பாலத்தில் மின்விளக்கு வசதி செய்யப்படாததால் இரவு நேரத்தில் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகின்றனர். எனவே பாலத்தில் மின்விளக்கு வசதி செய்து கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமசுப்பிரமணியன், கூனியூர்.

குண்டும் குழியுமான சாலை

முக்கூடல்- ஆலங்குளம் சாலையில் பெட்ரோல் பங்க்கில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் சாலை பாப்பாக்குடி, துலுக்கப்பட்டி பிரிவு வரையில் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகி்ன்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

தினேஷ், சிவகாமிபுரம்.

நெல்லை சந்திப்பு கண்ணம்மன் கோவில் சாலை குண்டும் குழியுமாக படுமோசமாக உள்ளது. மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. எனவே சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அய்யப்பன், கொக்கிரகுளம்.

சேதமடைந்த வாறுகால் பாலம்

முக்கூடல் சொக்கலால் தெருவில் வாறுகால் பாலம் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. ஏதேனும் கனரக வாகனம் வந்தால் உடைந்து விழும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

ஆதிமூலம், முக்கூடல்.

நாய்கள் தொல்லை

மூலைக்கரைப்பட்டி பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிவதுடன் ஆடு, மாடுகளையும், மனிதர்களையும் கடிக்கின்றன. இதனால் ஊர் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

முத்துக்குமார், தான்தோன்றி.

ஆபத்தான மின்கம்பம்

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை- சாயா்புரம் மெயின் ேராடு பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் உள்ள மின்கம்பம் மிகவும் சாய்ந்த நிலையில் உள்ளது. ஏதேனும் விபரீதம் நடக்கும் முன்பாக ஆபத்தான மின்கம்பத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ராமன், புதுக்கோட்டை.

பழுதடைந்த அடிபம்பு

கோவில்பட்டி லாயல் மில் காலனி இலுப்பையூரணி பஞ்சாயத்து தென்பகுதி செல்லும் சாலையின் கடைசி பகுதியில் அமைந்துள்ள அடிபம்பு பழுதடைந்துள்ளது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலமுருகன், கோவில்பட்டி.

சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

சாத்தான்குளம் தாலுகா பன்னம்பாறை அம்மன் கோவில் தெருவில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே இதை வெட்டி அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சுந்தர், பன்னம்பாறை.

ஊர் பெயா் பலகை வேண்டும்

சாத்தான்குளம்- திசையன்விளை சாலையில் அமைந்துள்ளது அடப்புவிளை கிராமம். இங்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஊர் பெயர் பலகையில் தற்போது இரும்பு கம்பிகள் மட்டுமே உள்ளது. பெயர் பலகையை காணவில்லை. இதனால் வெளியூர் வாகன ஓட்டிகள் ஊர் தெரியாமல் சிரமப்படுகின்றனர். எனவே பெயர் பலகை வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜேசு கோபின், பிரகாசபுரம்.

நாய் தொல்லை

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் தங்கம்மன் கோவில் தெரு, பத்திரகாளியம்மன் கோவில் தெரு, சத்திரம் பாரதி பள்ளி, மெயின் பஜார் ஆகிய பகுதிகளில் நாய்கள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. பொதுமக்கள், பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகளை துரத்துகின்றன. எனவே நாய் தொல்லையை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

திருக்குமரன், கடையம்.

வேகத்தடைகள் குறைக்கப்படுமா?

பனவடலிசத்திரத்தில் இருந்து பலபத்திரராமபுரம் வரையிலான 3 கிலோமீட்டர் தூரத்தில் மொத்தம் 33 வேகத்தடைகள் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் ஆஸ்பத்திரிக்கு அவசர சிகிச்சைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்டோர் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் வேகத்தடைகள் இருப்பதற்கான எச்சரிக்கை பலகையும் இல்லாததால் வெளியூர் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே வேகத்தடைகளின் எண்ணிக்கையை குறைத்து, எச்சரிக்கை பலகையும் வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

முருகேசன், பனவடலிசத்திரம்.

ஆபத்தான நிலையில் நூலக கட்டிடம்

பாவூர்சத்திரம் காமராஜர் நகர் தெற்கு பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடம் பல ஆண்டுகளாக பயன்பட்டு வந்தது. தற்போது கடந்த சில ஆண்டுகளாக இந்த கட்டிடம் பழுதடைந்துள்ளது. சிமெண்டு சிலாப்புகள் உடைந்து கீழே விழுந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே இந்த நூலகத்தை வேறு பகுதிக்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனோ, பாவூர்சத்திரம்.

எச்சரிக்கை பலகை தேவை

கடையம் யூனியன் ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே பொட்டல்புதூர் செல்லும் நெடுஞ்சாலையில் இசக்கியம்மன் கோவில் அருகே அபாய வளைவுகள் உள்ளன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வேகத்தடை அமைத்து, விபத்து பகுதி என எச்சரிக்கை பலகை வைப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

கிறிஸ்டோபர், கருத்தபிள்ளையூர்.

கல்வெட்டு சீரமைக்கப்படுமா?

பழைய குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிக்க அனுமதி பெற்று தந்து, அதனை திறந்து வைத்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் கல்வெட்டு பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

முத்துக்குமார், மூலைக்கரைப்பட்டி.


Next Story