'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஓடை பாலம் சேதம்

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி ராமசுவாமி கோவில் அருகில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் வழியில் ஓடையின் குறுக்கே உள்ள பாலம் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டுகிறேன்.

ராமசுப்பிரமணியன், கூனியூர்.

பழுதடைந்த மின்கம்பம்

மேலப்பாளையம் 48-வது வார்டு காட்டு புதுத்தெருவில் உள்ள மின்கம்பம் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த மின்கம்பத்தில் உள்ள ஒயர்களும் அறுந்து விழும் நிலையில் இருக்கிறது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் இந்த மின்கம்பம், மின் ஒயர்களை மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

காஜாமைதீன், மேலப்பாளையம்.

சேறும், சகதியுமான சாலை

மேலப்பாளையம் 52-வது வார்டு சேவியர் காலனி காமராஜர் சாலை புனித அந்தோணியார் ஆலயம் அருகில் குண்டும், குழியுமாக கிடக்கிறது. தற்போது பெய்த மழையால் அந்த பகுதி சேறும், சகதியுமான காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

விஜயராஜா, சேவியர் காலனி.

ஏ.டி.எம். மையம் அமைக்கப்படுமா?

திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு தமிழகத்தில் இருந்து மட்டும் அல்லாமல் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமானவர்கள் வருகிறார்கள். ஆனால் மக்கள் அவசர தேவைக்கு பணம் எடுக்க வேண்டும் என்றால் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திசையன்விளைக்கு தான் செல்ல வேண்டி இருக்கிறது. ஆகவே ஆத்தங்கரை பள்ளிவாசல் பகுதியில் ஏ.டி.எம். மையம் அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஷேக் முகம்மது, ஆத்தங்கரை பள்ளிவாசல்.

பஸ் நிறுத்தம் அருகே தேங்கும் கழிவுநீர்

திசையன்விளை தாலுகா கஸ்தூரிரெங்கபுரம் ஊராட்சி பஸ் நிறுத்தம் அருகில் நீண்ட நாட்களாக கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. ஆகவே இந்த கழிவுநீரை அகற்ற கேட்டுக் கொள்கிறேன்.

ஆண்ட்ரூஸ், கைலாசபேரி.

மின்விளக்கு எரியுமா?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி-நெல்லை செல்லும் மெயின் ரோட்டில் சந்தைபேட்டை தெரு முகப்பு வாயில் பகுதியில் மின்கம்பத்தில் உள்ள மின்விளக்கு எரியவில்லை. மேலும் இதன் அருகில் உள்ள மற்றொரு மின்கம்பத்திலும் மின்விளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். ஆகவே மின்விளக்கு எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

பாலமுருகன், கோவில்பட்டி.

ஆபத்தான பயணம்

விளாத்திகுளம் அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் படர்ந்தபுளியில் படித்து வருகிறார்கள். ஆனால் இந்த கிராமத்தில் இருந்து காலை 8 மணி அளவில் ஒரு அரசு டவுன் பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கிறார்கள். எனவே காலையில் மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்லும் நேரத்தில் கூடுதல் பஸ் இயக்கினால் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பிரகதீஸ்வரன், பிள்ளையார்நத்தம்.

சிமெண்டு சாலை அமைக்க வேண்டும்

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தில் குற்றாலம் பிள்ளை ஓடைத்தெருவின் வடக்கில் இருந்து தெற்கே செல்லும் ரோட்டின் கீழ் பகுதியிலும், வடக்கில் இருந்து குறுக்கு தெருவிலும் இதுவரை சிமெண்டு சாலை அமைக்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே இந்த பகுதியில் சிமெண்டு சாலை அல்லது பேவர் பிளாக் கற்கள் பதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

கண்ணன், முடிவைத்தானேந்தல்.

சுகாதாரக்கேடு

திருச்செந்தூர் நகரில் மேல்புறம் ஆவுடையார்குளம் வடிநீர் கால்வாயில் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. கழிவுநீரும் கலப்பதால் அந்த பகுதி சகதியாக மாறி வருவதுடன் கொசு உற்பத்தியாகி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. ஆகவே இந்த வடிநீர் கால்வாயை தூய்மைப்படுத்தி சுகாதாரக்கேட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மோகனசுந்தரம், திருச்செந்தூர்.

அரசு பஸ் இயக்க வேண்டும்

தூத்துக்குடியில் இருந்து குலையன்கரிசல், ஸ்பிக்நகர், முள்ளக்காடு, கூட்டாம்புளி, சேர்வைகாரன்மடம், சிவத்தையாபுரம், சாயர்புரம், நட்டாத்தி, பண்டாரவிளை, பெருங்குளம், ஏரல், குரும்பூர் வழியாக திருச்செந்தூருக்கு அரசு பஸ் வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த ஊர் வழியாக திருச்செந்தூருக்கு அரசு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

கணேசன், சாயர்புரம்.

குண்டும், குழியுமான சாலை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இருந்து கடையத்திற்கு திப்பணம்பட்டி, நாட்டார்பட்டி, அரியபுரம் வழியாக செல்லும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க கேட்டுக் கொள்கிறேன்.

சரவணன், நாட்டார்பட்டி.

சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

கடையம் யூனியன் கருத்தப்பிள்ளையூர் பகுதியில் ஏராளமான ெபாதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதுவும் குறைந்த நேரத்திலேேய குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு சிரமப்படுகிறார்கள். எனவே இந்த பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

ஆபத்தான மின்கம்பம்

சாம்பவர்வடகரை பேரூராட்சி பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் செல்ல அச்சப்படுகிறார்கள். இந்த மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

எஸ்ரா டேனியல், இலத்தூர்.

சாலையில் பள்ளம்

ஊத்துமலை பஸ் நிறுத்தம் அருகில் சங்கரன்கோவில் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் இந்த பள்ளம் மூடப்படாமல் உள்ளதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பள்ளத்தை விரைந்து மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

பாபா, ஊத்துமலை.

அரசு கல்லூரி அமைக்கப்படுமா?

செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் அரசு கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால் சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடையநல்லூருக்கும், 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுரண்டை அரசு கல்லூரிக்கும் தான் செல்ல வேண்டி இருக்கிறது. இவை தொலைவில் உள்ளதால் மாணவ-மாணவிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே மாணவர்கள் நலன் கருதி செங்கோட்டையில் அரசு கல்லூரி அமைத்தால் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் ெகாள்கிறேன்.

ராஜீவ்காந்தி, செங்கோட்டை.


Next Story