'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள்தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை

நெல்லை மாவட்டம் களக்காடு நகரில் இருந்து ஜெ.ஜெ. நகர், சவளைக்காரன்குளம், கோவிலம்மாள்புரம், காமநேரி, குட்டுவன்குளம், நல்லமரம் வழியாக டோனாவூர் வரை செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். ஆகவே, இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க கேட்டுக்கொள்கிறேன்.

சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

திசையன்விளை தாலுகா கஸ்தூரிரெங்கபுரம் ஊராட்சி முடவன்குளம் மற்றும் கைலாசபேரி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டத்தில் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இந்த கிராமமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். எனவே, இந்த பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

இசக்கியம்மாள், முடவன்குளம்.

ஆபத்தான மின்கம்பம்

ராதாபுரம் தாலுகா திருவம்பலபுரம் பஞ்சாயத்து ஆத்தங்கரை பள்ளிவாசல்-சங்கனாபுரம் சாலையோரத்தில் உள்ள மின்கம்பம் இரண்டாக முறிந்து ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டு இருக்கிறது. தற்போது, வீசிவரும் காற்றில் மின்கம்பம் ஆடுவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, மின்வாரிய அதிகாரிகள் அந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

குடிநீர் வசதி வேண்டும்

ெநல்லை கொண்டாநகரம் அருகே உள்ள திருமால் நகரில் சுமார் 400 வீடுகளுக்கு இருக்கிறது. இங்கு குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. மேலும், குடிநீருக்காக பொதுமக்கள் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டி உள்ளது. எனவே, இதுதொடர்பாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

முத்துக்குமார், திருமால்நகர்.

வீணாகும் குடிநீர்

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள சேரன்குளம், பொன்னன்குறிச்சி பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் கடந்த சில நாட்களாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மாரிமுத்து, பெருமாள்நகர்.

பஸ் கால அட்டவணை வைக்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பஸ் நிலையத்தில் இருந்து கழுகுமலை, தேவர்குளம், எப்போதும் வென்றான், விளாத்திகுளம், தூத்துக்குடிக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், இந்த பஸ்கள் எப்போது வரும் என்று தெரியாமல் பயணிகள் வெகுநேரம் காத்திருக்கிறார்கள். எனவே, பஸ்கள் வந்து செல்லும் கால அட்டவணை வைத்தால் நன்றாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சண்முகம், கயத்தாறு.

புகார் பெட்டி செய்தி எதிரொலி

கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் நகராட்சி 11-வது வார்டு தனுஷ்கோடியாபுரம் தென்வடல் சந்து பகுதியில் குடிநீர் குழாயில் நல்லி இல்லாததால் கம்பை திணித்து துணியை கட்டி வைத்து உள்ளனர். இதனால் தண்ணீர் வரும் நேரங்களில் வீணாக சென்று சாக்கடையில் கலக்கிறது. ஆகையால், குடிநீர் குழாயில் நல்லியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயில் நல்லியை பொருத்தி உள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.

வாகன ஓட்டிகள் அவதி

முறப்பாட்டில் நவகைலாய 5-வது தலமான கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் சாலை ஜல்லிக்கற்கள் மட்டுேம போடப்பட்டு உள்ளது. இதில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சிவசண்முகவேல், பெருமாள்புரம்.

சுகாதார வளாகம் திறக்கப்படுமா?

திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் உள்ள இலவச பொது சுகாதார வளாகம் மூடியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள மற்ற சுகாதார வளாகத்தில் காசு கொடுத்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். ஆகவே, மூடப்பட்டு கிடக்கும் ெபாது சுகாதார வளாகத்தை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

சாலமோன், குலசேகரன்பட்டினம்.

திறந்து கிடக்கும் கழிவுநீர் ஓடை

சாத்தான்குளம்-நாசரேத் சாலையில் புதிய பஸ் நிலையம் முதல் பழைய பஸ் நிலையம் வரை கழிவுநீர் செல்லும் ஓடை மூடப்படாமல் திறந்து கிடக்கிறது. சாலையோரத்தில் இருப்பதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, திறந்து கிடக்கும் கழிவுநீர் ஓடையை சிமெண்டு மூடி வைத்து மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பிரேம்குமார், சாத்தான்குளம்.

சாலை சீரமைக்கப்படுமா?

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மார்க்கெட் அருகில் உள்ள சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. ஆலங்குளத்தில் இருந்து குருவன்கோட்டை, குறிப்பன்குளம் வழியாக சுரண்டை, ரெட்டியார்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டுமானால் அந்த வழியாக தான் செல்ல வேண்டும். மேலும் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் ெகாண்டு வரும் விவசாயிகளும் அந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். அந்த சாலையில் வரும்போது வாகன ஓட்டிகளும், விவசாயிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். அதிலும் மழை நேரங்களில் சாலை சேறும் சகதியுமாக மாறி விடுவதால் நிலைமை மேலும் மோசமாக உள்ளது. அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஜெயவண்ணன், குறிப்பன்குளம்.

வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்

நெல்லையில் இருந்து ஆலங்குளம் செல்லும்போது, ஊர் எல்கையில் பெட்ரோல் பங்க் அருகே வேகத்தடை ஒன்று உள்ளது. அந்த வேகத்தடை மிகவும் உயரமாக உள்ளது. மேலும் அதன் மீது வேகத்தடைக்கான வர்ணமும் பூசப்படவில்லை. எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் இல்லை. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வெளியூரில் இருந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழும் நிலை உள்ளது. எனவே, வேகத்தடையின் மீது வர்ணம் பூசுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

சங்கர், ஆலங்குளம்.

திறந்து கிடக்கும் மின்பெட்டி

கடையம் யூனியன் தெற்கு கடையம் பஞ்சாயத்து தெருவில் மின்கம்பத்தில் உள்ள மின்பெட்டி பாதுகாப்பு மூடி இல்லாமல் திறந்து கிடக்கிறது. இதன் அருகில் குடிநீர் குழாய் உள்ளது. மேலும், இந்த பகுதியில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருவதால் தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் சென்று வருகிறார்கள். எனவே பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நலன் கருதி திறந்த நிலையில் உள்ள மின்பெட்டிக்கு மூடி அமைத்து சற்று உயரமான இடத்தில் மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

திருக்குமரன், கடையம்.

ஊர் பெயர் பலகையில் சுவரொட்டி

கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து ரகுமத்நகர் பகுதியில் ஊர் பெயர் பலகை உள்ளது. இந்த பலகையில் இருபுறமும் சிலர் சுவரொட்டிகளை ஒட்டி செல்கிறார்கள். இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் ஊர் எங்கு உள்ளது என்று தெரியாமல் குழம்புகிறார்கள். எனவே, பெயர் பலகையில் ஒட்டப்பட்டு உள்ள சுவரொட்டிகளை அகற்றுவதுடன், மீண்டும் ஒட்டாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

அம்ஜத், முதலியார்பட்டி.

பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்

கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் ஓடைப்பாலத்தின் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி மெதுவாக நடந்து வருவதால், அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் சிரமப்படுகிறார்கள். எனவே, இந்த பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மணிகண்டன், கடையநல்லூர்.


Next Story