'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

செயல்படாத சுகாதார வளாகம்

நெல்லை கொக்கிரகுளம் தொல்காப்பியர் தெருவில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகத்தில் உள்ள கழிப்பறைகள் சரியாக பராமரிக்கப்படாததால், செயல்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கழிப்பறைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சுகாதார வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், கொக்கிரகுளம்.

ரோடு மோசம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஒன்றியம் சிந்தாமணி ஊராட்சியில் இருந்து மூலைக்கரைப்பட்டி மற்றும் முனைஞ்சிப்பட்டிக்கு செல்லும் சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் ரோடு குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது. எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமலதாஸ், சிந்தாமணி.

பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கசமுத்திரம் வழியாக கோவில்குளம் செல்லும் தார் சாலையானது, குண்டும் குழியுமாக உள்ளது. இதனை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்து, அம்பை.

இருக்கை வசதி வேண்டும்

நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ்பகுதியில் தென்புறம் உள்ள பஸ்நிறுத்தத்தில் பயணிகள் அமருவதற்கு இருக்கைகள் இல்லை. இதனால் வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அங்கு இருக்கை வசதி ஏற்படுத்திக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இசக்கிமுத்து, நெல்லை.

சாலை அகலப்படுத்தப்படுமா?

பாளையங்கோட்டை அருகே மணப்படை வீடு முதல் கீழநத்தம் மேலூர், பொட்டல், சிங்கார பொட்டல் வரை சாலை மிகவும் குறுகியதாகவும், குண்டும் குழியுமாகவும் உள்ளது. பெரிய வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகனங்கள் விலகுவதற்கு இடமில்லை. எனவே சாலையை அகலப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பிரவீன் பெரியசாமி, மணப்படை வீடு.

கழிவுநீர் வெளியேற்றப்படுமா?


தூத்துக்குடி வெற்றிவேல்புரம் பகுதியில் பாதாள சாக்கடை தொட்டி அமைந்துள்ளது. இதில் தண்ணீர் வெளியேற்றுவதற்காக சிறிய மோட்டார் பம்புசெட் உள்ளது. நான்கு தெரு கழிவுநீரும் இந்த கழிவுநீர் தொட்டிக்கு வந்து சேருகிறது. இங்குள்ள மின்மோட்டார் கடந்த 4 மாதங்களாக பழுதாகி உள்ளது. இதனால் வாறுகாலில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமா?

சங்கர் கணேஷ், தூத்துக்குடி.

குடிநீர் வசதி

தூத்துக்குடி வடக்கு பீச் ரோட்டில் முத்துநகர் கடற்கரை பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது. இங்கு அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். இங்குள்ள ஒரு இடத்தில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தண்ணீர் குடிப்பதற்கு தேவையான டம்ளர் வசதி ஏற்படுத்தவில்லை. மேலும் கூடுதலாக சில இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

அன்பழகன், தூத்துக்குடி.

வேகத்தடை அவசியம்

கோவில்பட்டி கடலைக்கார தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தகுந்த இடங்களில் வேகத்தடை இல்லை. மார்க்கெட் ரோடு, மெயின் ரோடு ஆகிய பகுதிகளுக்கு ஆட்டோ, மினி லாரி உள்ளிட்ட வாகனங்கள் இந்த தெரு வழியாகவே செல்கின்றன. வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், அப்பகுதியில் உள்ள பள்ளிக்குழந்தைகள் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே வேகத்தடைகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தங்கபாண்டியன், கோவில்பட்டி.

வாறுகால் தடுப்புச்சுவர் கட்டப்படுமா?

சாத்தான்குளம் பேரூராட்சி முதலூர் சாலையில் டி.டி.டி.ஏ. பள்ளிக்கு எதிரே அபாயகரமான சாலை வளைவு உள்ளது. அந்த வளைவில் கழிவுநீர் வாறுகாலுக்கு தடுப்புச்சுவர் இல்லாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே அங்கு தடுப்புச்சுவர் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பேராத்து செல்வம், சாத்தான்குளம்.

ஆபத்தான மின்கம்பம்

கயத்தாறு தெற்கு வண்டானம், மானங்காத்தான் கிராமங்களில் விவசாய தோட்டங்களில் மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் உள்ளது. இதேபோல் பல்வேறு கிராமங்களில் மின்மோட்டார் பம்புசெட் கிணறுகளுடன் இருக்கும் விவசாய தோட்டங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளன. எனவே இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

பூவையா, கயத்தாறு.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

பாவூர்சத்திரத்தில் வென்னிமலை முருகன் கோவில் செல்லும் தார் சாலை அருகில் அரசு மாணவர் விடுதி மற்றும் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையம் உள்ளது. மாணவர் விடுதியின் காம்பவுண்டு சுவர் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. பலர் இவற்றை தீவைத்து விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே குப்பைகளை அப்புறப்படுத்த பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மந்திரமூர்த்தி, பாவூர்சத்திரம்.

காட்சி பொருளான தண்ணீர் தொட்டி

கீழப்பாவூர் ஒன்றியம் சிவநாடானூர் ஊராட்சி ஐயனூர் பிள்ளையார் கோவில் தெருவில் சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த தொட்டிக்கான மின்இணைப்பு வயர் அறுந்து கடந்த 20 நாட்களாக காட்சி பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டு உபயோகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். எனவே மின்இணைப்பை சரிசெய்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ஞானப்பிரகாசம், பூவனூர்.

ரெயில் கட்டணம் குறைக்கப்படுமா?

செங்கோட்டை- நெல்லை வழித்தடத்தில் இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்கள் அனைத்தும் எக்ஸ்பிரஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ரெயில்கள் அனைத்து நிலையங்களிலும் நின்று செல்கின்றன. இதனால் கால விரயம் ஏற்படுவதால், பயணிகளின் எண்ணிக்கை குறைகிறது. எனவே கட்டணத்தை குறைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

சிவசண்முகவேல், செங்கோட்டை.

சாலையில் ஓடும் கழிவுநீர்

கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சொக்கம்பட்டி பஞ்சாயத்து 4-வது வார்டு நேரு தெருவில் வாறுகால் சரியாக பராமரிக்கப்படாததால், அடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடுகிறது. இதனால் பாதசாரிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும் சுகாதாரக்கேடு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே வாறுகாலில் கழிவுநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், சொக்கம்பட்டி.

பட்டுப்போன மரங்கள்

பாவூர்சத்திரம் தினசரி காமராஜர் மார்க்கெட் பகுதியில் இருந்து ஆவுடையானூர் செல்லும் மெயின் ரோட்டின் ஓரம் தனியார் பள்ளியின் அருகே 3 பனை மரங்கள் பட்டுப்போன நிலையில் உள்ளது. தற்போது பலத்த சூறைக்காற்று வீசி வரும் நிலையில், அந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

தங்கநாதன், பாவூர்சத்திரம்.


Next Story