'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு

கோவில்பட்டி மாதாங்கோவில் ரோடு முச்சந்தி பகுதியில் உள்ள மின்கம்பமானது, காங்கிரீட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதிக்கு வாசகர் பாலமுருகன் அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதற்கு உடனடி தீர்வாக மின்கம்பம் மாற்றப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சேதம் அடைந்த இருக்கைகள்

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள பெரும்பாலான இருக்கைகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளன. பயணிகள் அமரும் வேளையில், சில சமயம் கவிழ்த்து கீழே தள்ளிவிடுகிறது. எனவே இருக்கைகளை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்

சிவ சண்முகவேல், பெருமாள்புரம்.

வேகத்தடை அவசியம்

நெல்லை மாவட்டம் ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். பள்ளிவாசல் எதிரே ரோடு வளைவு உள்ளது. அந்த வழியாக அதிக பாறாங்கற்களை ஏற்றிக் கொண்டு கனரக வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் விபத்துகள் நடப்பதற்கு முன்னதாக அந்த இடத்தில் வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

அபு, ஆத்தங்கரை பள்ளிவாசல்.

ஊர் பெயர் பலகை வேண்டும்

ராதாபுரம் பஞ்சாயத்து பாப்பான்குளத்தில் ஊர் பெயர் பலகை இல்லை. இதனால் புதிதாக அந்த வழியாக வரும் பயணிகளுக்கு ஊரின் பெயர் தெரிவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே பாப்பான்குளத்தில் ஊர் பெயர் பலகை வைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

குண்டும் குழியுமான சாலை

நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து தச்சநல்லூர் செல்லும் வழியில் ராம் தியேட்டர் அருகே இடதுபுறமாக சாலை வளைந்து செல்கிறது. அந்த சாலையின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தோஷ், நெல்லை.

ரெயில் நேரம் மாற்றப்படுமா?

நெல்லையில் இருந்து செங்கோட்டை பயணிகள் ரெயில், கொரோனா காலத்துக்கு முன்பு மாலை 6.25 மணிக்கு புறப்பட்டது. தற்போது 6.15 மணிக்கு புறப்பட்டு செல்கிறது. மேலும் சந்திப்பு பஸ்நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் காரணமாக ஒரு சில பஸ்கள் மட்டுமே ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றன. இதனால் பாளையங்கோட்டை, சமாதானபுரம் பகுதியில் வேலை பாா்கும் கூலி தொழிலாளர்கள், ரெயிலை பிடிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே முன்பு போன்று 6.25 மணிக்கு ரெயில் புறப்பட்டுச் செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துராமன், கங்கணாங்குளம்.

போக்குவரத்து நெருக்கடி

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி 4 பஜார் வீதிகள், பஸ் நிலையம் பகுதியில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஆங்காங்கே பல மணி நேரம் நிறுத்திவிட்டு வாகன உரிமையாளர்கள் அப்படியே சென்று விடுகின்றனர். இதனால் அந்த வழியாக வரும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் பாதசாரிகளும் கடும் அவதிப்படுகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

ராஜா, உடன்குடி.

ஆபத்தான மின்கம்பம்

தூத்துக்குடி மாவட்டம் எம்.சண்முகபுரம் பஞ்சாயத்து கீழசண்முகபுரம் கிராமம் மேற்கு தெருவில் உள்ள மின்கம்பத்தில் காங்கிரீட் முழுவதுமாக பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே ஆபத்தான அந்த மின்கம்பத்தை மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயமணி ராஜா, கீழசண்முகபுரம்.

கரடுமுரடான சாலை

காயல்பட்டினம் நகராட்சி 17-வது வார்டு பூந்தோட்டம் பத்திரகாளியம்மன், முத்தாரம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை கரடு முரடாக உள்ளது. தற்போது ஆடி மாதம் என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

சண்முகவேல், காயல்பட்டினம்.

திருச்செந்தூர் தாலுகா குலசேகரன்பட்டினம் வடக்கூர் மேலத்தெரு, கீழத்தெவில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். ஆகவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலமன், குலசேகரன்பட்டினம்.

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் திப்பணம்பட்டியில் பயணிகள் நிழற்கூடம் பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும், இதனை அகற்றி புதிதாக பயணிகள் நிழற்கூடம் கட்டித்தர வேண்டும் எனவும் கடையத்தை சேர்ந்த வாசகர் திருக்குமரன், 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக பயணிகள் நிழற்கூடம் இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதிதாக கட்டுவதற்கான வேலைகளும் தொடங்கப்பட உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மின்விளக்கு எரியாத ஏ.டி.எம். மையம்

தென்காசி மாவட்டம் குணராமநல்லூர் பஞ்சாயத்து மத்தளம்பாறை கிராமத்தில் ஏ.டி.எம். மையம் உள்ளது. அங்கு கடந்த ஒரு மாதமாக மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். எனவே மின்விளக்கு எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணன், மத்தளம்பாறை.

நாய் தொல்லை

தென்காசி மேலகரம் முப்புடாதி அம்மன் கோவில் முன்பாக அதிகப்படியான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. மேலும் இந்த நாய்கள் மெயின் ரோட்டில் உள்ள இறைச்சி கடைக்கும், தெருவிற்கும் கடந்து செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

கார்த்திக், மேலகரம்.

ஆபத்தான மின்கம்பம்

கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து இந்திராநகர் 1-வது தெருவில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையத்தின் அருகே உள்ள மின்கம்பத்தில் காங்கிரீட் முழுவதுமாக பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

அம்ஜத், முதலியார்பட்டி.

சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படுமா?

சுரண்டையில் ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக செயல்படுகிறது. பஞ்சாயத்து, நகரப்பஞ்சாயத்து என தற்போது சுரண்டை நகராட்சியாக தரம் உயர்ந்தும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்ைல. ஏதேனும் அவசர சிகிச்சை என்றாலும் தென்காசிக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. எனவே இந்த சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி 24 மணி நேரம் செயல்படுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சுரேஷ், சுரண்டை.


Next Story