'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

கோவில்பட்டி- மதுரை மெயின் ரோட்டில் அமைந்துள்ள காமராஜர் சிலை அருகில் அடிபம்பு கீழ்தளத்தில் சிமெண்டு கலவை பூச்சு இல்லை. இதனால் அடிபம்பை சுற்றி தண்ணீர் சாக்கடை போல் தேங்கி கிடப்பதால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக, கோவில்பட்டியை சேர்ந்த வாசகர் பாலமுருகன் என்பவர், 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக அடிபம்பை சுற்றிலும் காங்கிரீட் தளம் போடப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

தெரு விளக்குகள் அமைக்கப்படுமா?

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி யூனியன் வடுகன்பட்டி அருகே உள்ள திருமால் நகரில் சுமார் 850 குடியிருப்புகள் உள்ளன. இங்கு மொத்தம் 36 தெருக்கள் உள்ளன. ஆனால் 7 தெருக்களில் மட்டுமே மின்விளக்குகள் உள்ளன. மற்ற தெருக்களுக்கு மின்விளக்கு வசதி இல்லை. இதனால் விஷஜந்துக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. எனவே, மின்விளக்குகள் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சந்தனசேகர், திருமால்நகர்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

ராதாபுரம் தாலுகா கூடங்குளம் சந்தைக்கு அருகில் பெருமளவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதன் மேல் குப்பைகளும் கொட்டப்பட்டு இருப்பதால் கொசுக்களின் உற்பத்தி நிலையமாக மாறியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் மிகப்பெரிய சுகாதாரக்கேட்டை விளைவித்து விடுமோ? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, கழிவுநீரை முற்றிலும் அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

சேதம் அடையும் குடிநீர் குழாய்கள்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கருங்குளம் முதல் மூலைக்கரைப்பட்டி வரை சுமார் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ளன. கனரக வாகனங்கள் செல்வதால் இவ்வாறு அடிக்கடி சேதம் அடைகிறது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மாரிமுத்து, பெருமாள்நகர்.

அங்கன்வாடி மையம்

சேரன்மாதேவி யூனியன் தெற்கு வீரவநல்லூர் பஞ்சாயத்து அழகப்பபுரம் கிராமத்துக்கு உரிய அங்கன்வாடி மையமானது, சுமார் 4 கிலோமீட்டர் தூரம் உடைய மாதுடையார்குளம் ஊரில் செயல்படுகிறது. இதனால் குழந்தைகள் செல்ல சிரமப்படுகிறார்கள். எனவே, அந்த அங்கன்வாடி மையத்தை, அழகப்பபுரம் கிராமத்துக்கு கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமச்சந்திரன், அழகப்பபுரம்.

கழிவுநீர் வாறுகால் சுத்தப்படுத்தப்படுமா?

மானூர் தாலுகா தென்கலம் பஞ்சாயத்து 6-வது வார்டில் கழிவுநீர் வாறுகாலை சுத்தம் செய்து சுமார் 3 மாதங்கள் ஆகிறது. தற்போது குப்பைகள் நிறைந்து கொசு தொல்லை அதிகரித்துள்ளது. எனவே, வாறுகாைல சுத்தப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

பிரேம்குமார், நல்லம்மாள்புரம்.

குண்டும், குழியுமான சாலை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா உடன்குடி பேரூராட்சி 8-வது வார்டு சமத்துவநகர் கிராமத்தில் கடந்த 2020-ம் ஆண்டு சாலையை விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று காரணமாக பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. எனவே, குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அய்யப்பன், சமத்துவநகர்.

சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?

திருச்ெசந்தூர் கடற்கரை அருகே அமைந்துள்ள சிறுவர் பூங்கா பல மாதங்களாக பராமரிக்கப்படவில்லை. அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்துள்ளது. எனவே, சிறுவர் பூங்காவை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மோகனசுந்தரம், திருச்செந்தூர்.

வாறுகாலில் கழிவுநீர் தேக்கம்

கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் புதுரோடு பகுதியில் வாறுகால் பணி பல மாதங்களாக முடிவடையாத நிலையில் நேற்று முன்தினம் பெய்த சிறு மழையால், வாறுகாலில் கழிவுநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெய்லானி இக்பால், முகம்மது சாலிகாபுரம்.

ஆபத்தான மின்மாற்றி

சாத்தான்குளம் அருகே முதலூர்- கடாட்சபுரம் செல்லும் சாலையில் மின்மாற்றி ஒன்று உள்ளது. அதன் கம்பங்களில் காங்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள அந்த மின்மாற்றியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுப்பிரமணியன், முதலூர்.

அபாய பள்ளம்

தென்காசியில் இருந்து அம்பை செல்லும் நெடுஞ்சாலையில் மத்தளம்பாறையில் ஆபத்தான வளைவு ஒன்று உள்ளது. அங்கு பல இடங்களில் அபாயகரமான பள்ளங்கள் இருப்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, அபாய பள்ளங்களை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருக்குமரன், கடையம்.

சுகாதார வளாகம் சுத்தப்படுத்தப்படுமா?

பாவூர்சத்திரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் வெளியூருக்கு செல்ல பாவூர்சத்திரம் பஸ்நிலையத்திற்குதான் வர வேண்டும். தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்லும் நிலையில், இங்கு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் இலவச சுகாதார வளாக வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த வளாகம் சுகாதாரமற்ற நிலையில் சீர்கேடாக உள்ளது. அத்துடன் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, உடனடியாக இதை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், பாவூர்சத்திரம்.

வேகத்தடை வேண்டும்

செங்கோட்டை தாலுகா சீவநல்லூர் அரசு ஆரம்ப பள்ளியின் முன்பு வேகத்தடை அமைத்து பல ஆண்டுகளை கடந்து விட்டதால் தற்போது அதன் உயரம் குறைந்து விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் வேகமாக வருவதால் பள்ளி மாணவர்கள் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, பள்ளிக்கூடம் முன்பு சாலையின் இருபுறமும் புதிதாக வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

எஸ்ரா டேனியல், இலத்தூர்.

வாகன ஓட்டிகள் அவதி

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை, திரவியநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தென்காசி மற்றும் கேரளாவுக்கு கட்டுமான பணிகளுக்காக லாரிகளில் மணல் ஏற்றிச் செல்லப்படுகிறது. ஆனால் அவற்றை தார்ப்பாய் கொண்டு மூடாமல் செல்வதால், லாரிகளின் பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

சுப்பிரமணியன், தென்காசி.

கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்கள்

குற்றாலம் சீசனை அனுபவித்துச் செல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இதனால் தென்காசி, செங்கோட்டை ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. எனவே, செங்கோட்டை ரெயில் நிலையத்தில் கூடுதலாக டிக்கெட் கவுன்ட்டர்களை திறப்பதற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கனியமுதன், செங்கோட்டை.


Next Story