'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திறந்து கிடக்கும் மின்பெட்டி

நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா நவ்வலடி ஆரம்ப சுகாதார நிலையம் முன்புள்ள மின்கம்பத்தில் மின்பெட்டி திறந்து கிடக்கிறது. ஏராளமான நோயாளிகள், குழந்தைகள் வரும் இடமாக இருப்பதால் அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே, மின்பெட்டியை பூட்டி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

பராமரிக்கப்படாத தகவல் பலகை

ஏர்வாடி சிறப்பு நிலை பேரூராட்சி பகுதிகளில் ஊரை பற்றிய முழு விவரங்கள் அடங்கிய தகவல் பலகைகள் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்தது. ஊராட்சி மன்ற தேர்தலுக்கு பிறகு இது பராமரிக்கப்படவில்லை. இதனால் ஊரை பற்றிய விவரங்கள் தொடர்பு எண்களோடு அறிய முடியவில்லை. எனவே, தகவல் பலகைகளை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

காஜா நஜிமுதீன், ஏர்வாடி.

கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்படுமா?

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். உள்நோயாளிகள் சுமார் 800-க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெறும் நிலையில் அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்ய 601 என்ற வார்டு ஒன்று செயல்படுகிறது. இங்கு 4 கவுன்ட்டர்கள் இருந்தாலும், 2 கவுன்ட்டர்கள் மட்டுமே செயல்படுகிறது. அதில் ஒன்று ரத்த சேகரிப்பு பணியையும், மற்றொன்று ரத்த மாதிரியின் பரிசோதனை முடிவுகளையும் வழங்கி வருகிறது. 2 கவுன்ட்டர்கள் மட்டுமே செயல்படுவதால் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, ரத்த பரிசோதனை வங்கிக்கு கூடுதல் கவுன்ட்டர்களை திறந்து நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் உதவியாளர்களின் காத்திருப்பு நேரத்தை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ராதாகிருஷ்ணன், ஸ்ரீவைகுண்டம்.

குண்டும் குழியுமான சாலை

ராதாபுரம் தாலுகா தெற்கு கள்ளிகுளம் ஆர்தர் நகரில் தெருக்களில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழைக் காலத்தில் சாலை சேறும் சகதியுமாக மாறி விடுவதால், பள்ளம் மேடு தெரியாமல் வாகன ஓட்டிகள் தவறி விழும் நிலை உள்ளது. எனவே, மழைக்காலம் வருவதற்கு முன்னதாக சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தமிழ், தெற்கு கள்ளிகுளம்.

தெருவிளக்கு தேவை

திசையன்விளை- உடன்குடி ரோடு புதிய மின்நிலையம் அருகே (புத்தன்தருவை- உடன்குடி பிரிவு சந்திப்பு) இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே, அங்கு மின்விளக்கு அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

கார்த்தீசன், திசையன்விளை.

தேங்கி கிடக்கும் கழிவுநீர்

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா சங்குபட்டி ஊராட்சி சி்ன்னக்காளாம்பட்டி கிராமத்தில் வீடுகளுக்கு குடிநீர் வழங்க குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும்போது வாறுகாலை பெயர்த்து உடைத்து விட்டனர். இதனால் கழிவுநீர் சரியாக செல்ல முடியாமல் கடந்த சில மாதங்களாக தேங்கி கிடப்பதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடராஜன், சின்னக்காளாம்பட்டி.

பழுதடைந்த சுகாதார வளாகம்

கடையம் யூனியன் திருமலையப்பபுரம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் பழுதடைந்து கடந்த 3 வருடங்களாக பூட்டிக் கிடக்கிறது. அதன் அருகில் பள்ளிக்கூடம், ரேஷன் கடை, அங்கன்வாடி, பஸ்நிறுத்தம் உள்ளது. அதிக அளவில் மக்கள் கூடும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுகாதார வளாகத்தில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே, சுகாதார வளாகத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

திருக்குமரன், கடையம்.

காங்கிரீட் பெயர்ந்த மின்மாற்றி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா பள்ளக்குறிச்சி பஞ்சாயத்து கருமாவிளை- பள்ளிப்பத்து ஊர்களுக்கு இடையே பழைய மின்மாற்றி ஒன்று உள்ளது. தற்போது அந்த மின்மாற்றியின் கம்பங்கள் காங்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் அந்த வழியாக ஒருவித அச்சத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது. எனவே, மின்மாற்றியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவமுருகன், பள்ளிப்பத்து.

ஆபத்தான மின்கம்பம்

கோவில்பட்டி காளியப்பர் தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் காங்கிரீட் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. எனவே, ஆபத்தான மின்கம்பத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

பாலமுருகன், கோவில்பட்டி.


Next Story