தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

போக்குவரத்திற்கு இடையூறு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், செட்டிகுளம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் காய்கறி சந்தை அமைந்துள்ள இடம் மிகவும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, கிழக்கே உள்ள மலைக்கடை பகுதியில் அமைந்துள்ள வெங்காய சந்தைக்கூடம் அல்லது அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் காய்கறி சந்தை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாலகுரு, பழைய விராலிப்பட்டி.

குரங்குகள் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெம்பாவூர், வடகரை ஆகிய ஊர்களுக்கு இடையில் ஆறு ஒன்று உள்ளது. இந்த ஆற்றின் கரைப்பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் அனைத்தும் வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள சமையல் பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை எடுத்துச்சென்று விடுகின்றது. மேலும் கடைகளில் உள்ள பொருட்களை எடுத்துச்சென்று விடுகின்றது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வெம்பாவூர்.

வாகன ஓட்டிகள் அவதி

பெரம்பலூர் மாவட்டம் நமையூர் கிராமத்தில் வசந்த் நகர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தெரு நாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் மோட்டார் சைக்கிளில் செல்வோர் பின்னால் துரத்தி சென்று கடிக்க வருகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பெண்கள், முதியவர்கள் சாலையில் நடக்க முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், நமையூர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிக்குளம் கிராமம் பஸ் நிலையத்தில் இருந்து ஆலத்தூர் கேட் செல்லும் சாலை, பெரம்பலூர், திருச்சி செல்லும் சாலையோரங்களில் ஏராளமான கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் அந்த வழியாக வாகனத்தில் செல்வோர் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் நடந்து செல்லவும் முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மணிகண்டபிரபு, செட்டிக்குளம்.

வாய்க்கால் பாலம் அமைக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராமம், அண்ணா நகர் வடக்கு தெருவிற்கும், பிரதான தெருவிற்கும் இடையே சாலை ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்காலை பொதுமக்கள் கடந்து செல்லும் வகையில் சிறிய அளவிலான குழாய் அமைத்து பாலம் போல் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற திருவிழாவின்போது இந்த குழாயை அகற்றிவிட்டனர். இதனால் இந்த தெருவின் உள்ளே முதியவர்கள் மற்றும் பெண்கள் இந்த கழிவுநீர் வாய்க்காலை கடந்து செல்ல பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கழிவுநீர் வாய்க்கால் திறந்து கிடப்பதினால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வசந்த் பிரபு, செங்குணம்.


Next Story