சென்னையை நெருங்கிய `மிக்ஜம்' புயல்: சூறைக்காற்றுடன் விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை


தினத்தந்தி 4 Dec 2023 12:03 AM GMT (Updated: 4 Dec 2023 12:04 AM GMT)

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்க கடல் பகுதியில் கடந்த 27-ந்தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது அதற்கடுத்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று, நேற்று முன்தினம் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு இருந்தது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாகவும் வலுவடைந்துவிட்டது.

இதற்கு மியான்மர் நாடு `மிஸ்சாங்' என்று பெயரிட்டு இருக்கிறது. இதன் அர்த்தம் வலிமை அல்லது நெகிழ்ச்சி என சொல்லப்படுகிறது. இதனை `மிக்ஜம்' என வானிலை ஆய்வு மையம் உச்சரிக்கிறது. வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் இந்த மிக்ஜம் புயல் மேலும் தீவிரம் அடைகிறது.

அந்த வகையில் `மிக்ஜம்' புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (திங்கட்கிழமை) காலை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனையொட்டிய தமிழ்நாட்டில் சென்னை உள்பட வட கடலோரப் பகுதிகளில் நெருங்கி நிலவக்கூடும்.

அதன்பிறகு, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளையொட்டி வடக்கு திசையில் நகர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை தெற்கு ஆந்திரா கடற்கரையையொட்டி நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும். அந்த நேரத்தில் மணிக்கு 90 முதல் 110 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும்.

இந்த புயல் தமிழ்நாட்டின் வட கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்பதால், அந்த பகுதிகளில் மழை மற்றும் காற்றுக்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று வட மாவட்டங்களில் அனேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அந்தவகையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நிர்வாக ரீதியாக சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது.

இதுதவிர, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மழையைப் போலவே சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) தரைக்காற்று மணிக்கு 60 முதல் 80 கி.மீ. வேகத்திலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 70 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

அதனைத் தொடர்ந்து நாளை தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலில் வலுப்பெற்ற `மிக்ஜம்' புயல், இன்று அதிகாலை 2.15 மணி நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கே - தென் கிழக்கே 150 கி.மீ. தொலைவில் நிலைகொண்டு இருந்தது.

இந்த புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (திங்கட்கிழமை) காலை புயலாக வட தமிழக கடலோரப் பகுதிகளை கடந்து, மாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுப்பெற்று தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி செல்லக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 5.30 மணிக்கு மேல் தீவிர புயலாக நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது சூறைக்காற்றுடன் கூடிய கனமழை நீடித்து வருகிறது.

தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வட தமிழக கடலோரப் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் நாளை வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


Next Story