இணையதள வளர்ச்சியும் சைபர் கிரைம் குற்றங்களும் ஒரே ஆண்டில் இருமடங்கானது


இணையதள வளர்ச்சியும் சைபர் கிரைம் குற்றங்களும்  ஒரே ஆண்டில் இருமடங்கானது
x
தினத்தந்தி 1 Nov 2022 6:45 PM GMT (Updated: 1 Nov 2022 6:45 PM GMT)

இணையதள வளர்ச்சியும் சைபர் கிரைம் குற்றங்களும் அதிகாித்துள்ளது.

கள்ளக்குறிச்சி

இணையத்தின் அபரிவிதமான வளர்ச்சி நன்மைகள் அளித்தாலும், அதை சார்ந்த நுட்பமான குற்றங்களும் உலகில் பெருமளவு பெருகிவிட்டது.

நாட்டில் 2ஜி சேவை தொடங்கியது முதல் செல்போன் புரட்சி ஏற்பட்டது. அந்த சமயத்தில் இருந்துதான் சாமானியர்கள் கைகளில் செல்போன் தவிழ தொடங்கியது. அதன் பின் 3ஜி, 4ஜி என்று அதன் தலைமுறைகளும் வளர்ச்சியடைந்து, இன்று ஐந்தாம் தலைமுறை என்று சொல்லப்படும் 5ஜி சேவையில் வந்து நிற்கிறது.

நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி திருட்டு

இத்தகைய டிஜிட்டல் மையத்தால் ஆன்லைன் சேவைகளுக்கான கதவுகள் திறக்கப்பட்டது. இதன் வழியாக எண்ணிலடங்கா பயன்கள் நமக்கு வந்தாலும், கூடவே, அந்த வழியாக மோசடி கும்பல்களும் உள் நுழைந்து விட்டார்கள். இதனால் இணைய தொழில்நுடபத்துடன், நுட்பமான குற்றங்களும் பெருக தொடங்கி விட்டது.

இந்திய அளவில் நாளொன்றுக்கு சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபடும் திருடர்களால் அரங்கேற்றப்படும் குற்ற சம்பவங்கள் மூலம் சுமார் ரூ.100 கோடி வரைக்கும் திருடப்பட்டு வருகிறது.

காரணம், அதிகரிக்கும் செல்போன் பயன்பாடும், இணைய தொழில் நுட்பங்களின் அபரிவிதமான வளர்ச்சி, அதனுடன் இணையத்தில் எல்லைமீறிய நமது தேடல்களும் தான்.

தமிழகத்துக்கு 2-வது இடம்

இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. கிராமங்களில் மட்டும் சுமார் 42 சதவீதம் பேர் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள்.

இப்படி செல்போன் பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில் அது சார்ந்த குற்றசம்பவங்களும் அதிகரிக்க தான் செய்கிறது. சைபர் கிரைமில் வெவ்வேறு வடிவில் பொதுமக்கள் பணத்தை இழக்கிறார்கள். அதில் ஒருவகையானது ஆன்லைன் வேலை வாய்ப்பு என்கிற பெயரில் நடக்கும் குற்றங்கள்.

பகுதி நேர வேலைவாய்ப்பு

படித்து வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் திருமணமாகி வீட்டில் இருக்கும் பெண்கள் நமக்கு ஏதேனும் பகுதி நேர வேலை வாய்ப்புகளாவது கிடைக்குமா? என்று செல்போன்களில் தேடாதவர்கள் யாரும் இல்லை. இந்த தேடல்தான் மோசடிகாரர்களின் மூலதனம்.

ஆம், ஆன்லைனில் வேலை தேடுபவர்களின் விவரங்களை அறிந்து, அவர்களை வாட்ஸ்-அப் அல்லது வேறு ஏதேனும் ஒரு வழியில் மோசடி கும்பல் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயரில் வேலை இருப்பதாக கூறி பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இருமடங்காக உயர்ந்த குற்றம்

அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் 1,150 பேர் பணத்தை பறிகொடுத்துள்ளனர். ஆனால் நடப்பு ஆண்டில் பணத்தை பறிகொடுத்தவர்களின் எண்ணிக்கை இருமடங்காகி இருக்கிறது.

அதாவது இந்த ஆண்டில்(2022) 10 மாதங்களில் மட்டும் இதுவரைக்கும் 2,120 பேர் பணத்தை இழந்து இருப்பதாக கூறி புகார் அளித்துள்ளனர். இதில் 600-க்கும் மேற்பட்ட புகார்கள் விசாரணையில் உள்ளது என்பது சமீபத்தில் சைபர் கிரைம் போலீசாரால் தெரிவிக்கப்பட்ட அதிர்ச்சியான செய்தியாகும்.

மோசடியில் ஈடுபடும் கும்பல் வடமாநிலங்களை சேர்ந்தவர்களாக இருப்பதால், அவர்களை கண்டுபிடித்து பணத்தை பறிமுதல் செய்வது என்பது போலீசாருக்கு சவாலாகவே இருக்கிறது.

'மால்வேர்' எச்சரிக்கை மணி

இதுபோன்ற மோசடிகள் ஒருபுறம் இருக்க 'மால்வேர்' என்கிற மோசடி கடந்த 2016-ம் ஆண்டு முளைத்தது. இது கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து தீவிரமாக செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சைபர் ஆராய்ச்சி மற்றும் புலனாய்வு ஆய்வகம்(சிரில்) எச்சரிக்கை மணி ஒன்றையும் அடித்தது.

அதாவது, வருமான வரித்துறையின் அதிகார பூர்வ இணையதளம் போல் செயல்படும் புதிய 'டிரினன் ஆண்ராய்டு டிரோஜன்' என்கிற மால்வேர் 18 வங்கிகளை குறிவைத்து, ஊடுருவி வருகிறது. வருமான வரி செலுத்துவோர் அதை திரும்ப பெறுவதற்கான செயலி என்று கூறி, அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை மொத்தமாக சுருட்டி சென்றுவிடுவார்கள். ஆகையால், உங்கள் செல்போன்களில் சந்தேகத்துக்கு உரிய வகையில் புதிய லிங்க் ஏதோவது வந்தால் அதில் சென்று பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

மோசடி நபர்களின் சதிவலை

இவ்வாறாக இன்றைய டிஜிட்டல் உலகில் குற்றங்கள் டிஜிட்டல் வாயிலாக பல்வேறு வடிவங்களில் பரிமாணம் பெற்று சென்று கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில், இணையவழி மோசடிகள் பெருகுவதற்கு வாய்ப்புகள் இன்னும் அதிகமாக தான் இருப்பதையே தற்போதைய மோசடி விவரங்கள் காட்டுகிறது.

இதுபோன்ற குற்றங்களை தடுக்க, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டுவிட்டரில் @cyberdost பக்கத்தை அரசு உருவாக்கி உள்ளது. வெகுஜனமக்கள் பயன்படுத்தும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களிலும் இதே பெயரில் இயங்கி விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

என்னதான் சட்டங்கள், விழிப்புணர்வுகள் இருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் விழிப்போடு நடந்தால், மோசடி நபர்களின் சதிவலைகளில் சிக்காமல் சைபர் குற்றங்கள் ஒருநாள் நிச்சயம் சைபர்(பூஜியம்) ஆகும்.

இது தொடர்பாக மக்கள் தெரிவித்த கருத்துகள் குறித்து பார்ப்போம்:-

5ஜி சேவையில் இன்னும் மோசமாகும்

கடலூரை சேர்ந்த வக்கீல் தி.ச.திருமார்பன் கூறியதாவது:-

இன்றைய சூழலில் பண பரிமாற்றம் என்பது தனியார் வசம் சென்றுவிட்டது. இதனால் நம்மை பற்றிய தரவுகள் முழுவதும் தனியார் வசம் செல்கிறது. இதை ஹேக் செய்பவர்கள் எளிதில் அணுகி ஒவ்வொருவரது தரவுகளையும் எடுத்துக்கொள்கிறார்கள்.

நம்மை பற்றிய விவரங்களை சேகரிக்கப்பதற்காகவே தனியாக ஏஜென்சியே இருக்கிறது. நாம் ஆன்லைனில் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று தேடினால், அது தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட நிறுவன பொருட்கள் நமது செல்போன்களுக்கு வருகிறது. இது யாரிடம் இருந்து வருகிறது. நமது மனநிலை என்ன என்பது அவர்களுக்கு தெரிகிறது. இதுதான் நமக்கு ஆபத்தானது.

5ஜி சேவையில் இந்த நிலை இன்னும் மோசமாகும். நாம் என்னதான் விழிப்பாக இருந்தாலும், எதிராளிக்கு திருடக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இதற்கு ஒரே வழி, முழுவதும் டிஜிட்டலாக மாறி உள்ள நாடுகளில் எந்த விதத்தில் குற்றங்கள் நடந்துள்ளது, அதை எப்படி தடுத்துள்ளனர் என்பதை தனி குழுவை அனுப்பி ஆராய்ந்து, எதிர்கொள்ள வேண்டும். எனவே விழிப்புணர்வை காட்டிலும் அரசு தான் கூடுதல் கவனம் செலுத்தி இதில் செய்பட வேண்டும்.

11 இலக்க செல்போன் எண் அழைப்பு

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பன்:-

செல்போன் அழைப்பு மூலம் யார் கேட்டாலும், வங்கி தொடர்பான விவரங்களை அளிக்க கூடாது. அதேபோன்று நமக்கு சம்பந்தமில்லாமல் 11 டிஜிட்டல் நம்பர் (அதாவது அயல்நாட்டு அழைப்பு) போன் வந்தாலும் அதை எடுக்காமல் தவிர்ப்பது நல்லது.

ஏனெனில் ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு எண் மற்றும் செல்போன் நம்பர் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை எடுத்து பேசும்போது அவர்கள் ட்ரேசர் செய்து நமது வங்கி கணக்கு எண் மற்றும் ஏ.டி.எம். பின் நம்பர் அனைத்தையும் திருடி நமது வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருட வாய்ப்புள்ளது.

மேலும் நீங்கள் வீட்டில் இருந்தே பணிபுரியலாம். மாத சம்பளம் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். அதற்கு குறிப்பிட்ட பணம் கட்ட வேண்டும் என உங்கள் ஆசையை தூண்டும் வகையில் செல்போனுக்கு குறுஞ்செய்தி வரும்.

இதனை நம்பி ஏராளமான இளைஞர்கள் பணத்தைக் கட்டி ஏமாந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இருந்த போதும் பலர் பணத்தை இழந்து விடுகின்றனர். எனவே இது போன்று ஏமாறாமல் இருப்பது இணையவழி செல்போன்களை பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியமானது.

டிஜிட்டல் பணபரிவர்த்தனை

விழுப்புரம் வள்ளலார் தெருவை சேர்ந்த ஜெகதீஷ்வரி சத்யராஜ்:-

அனைத்து தரப்பு மக்களும் தற்போது இணையதளத்தை பயன்படுத்தி வருகிறார்கள். டிஜிட்டல் வழி பண பரிவர்த்தனைகளும் அதிகரித்துள்ளது, இதனால் பலர் பணத்தை இழக்கவும் செய்கிறார்கள்.

தற்போது ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு எண் இணைக்கும் வகையில் தேசிய வங்கி நல்லெண்ணத்துடன் செய்தாலும், அதனை வைத்து எளிதில் அடையாளம் கண்டு குறுஞ்செய்தி, டெபிட் கார்டு பரிவர்த்தனை, கைரேகை மூலம் பரிவர்த்தனை செய்யும்போது மூத்த குடிமக்கள் கணக்கில் எளிதில் மோசடி செய்யப்படுகிறது.

சில தேவையற்ற இணையதளத்தில் செல்வதால் பணம் மற்றும் தொலைபேசி தகவல் திருடப்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க அரசும், காவல்துறை அதிகாரிகளும் முன்வந்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

செல்போன் பயன்கள் குறித்த தகவல்களையும், சமூகவலைத்தளங்களின் மூலம் ஏற்படும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வையும் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளிடம் ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் எந்தவொரு விழிப்புணர்வு என்றாலும் மாணவர்களிடமிருந்து முதலில் தொடங்கினால் பொதுமக்களிடம் அது விரைவாக சென்றடையும்.



விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் அதிகரிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இணையவழி மோசடி தொடர்பாக மொத்தம் 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ரூ.80 லட்சம் அளவிற்கு பணம் மோசடி நடந்துள்ளது.

நடப்பு ஆண்டில், கடந்த 10 மாதங்களில் மட்டும் 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ரூ.1 கோடியே 20 லட்சம் தொகை மோசடி நடந்துள்ளது. இதுவரை ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் தொகை ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.50 லட்சம், வங்கிகள் மூலம் முடக்கம் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வங்கி கிளை அதிகாரிகள் மூலமாக பேசி உரியவர்களிடம் ஒப்படைக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டமானது கடந்த 2019 நவம்பர் மாதம் விழுப்புரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டமாக உருவானது. சைபர் கிரைம் பிரிவு கடந்த 2021 மார்ச் வரை விழுப்புரத்தில் செயல்பட்டு வந்தது. அதன்பிறகு கடந்த 2021 ஏப்ரல் முதல் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் செயல்பட தொடங்கியது. இதில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி 31-10-2022 வரை சைபர் கிரைம் போலீசில் 49 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மேலும், 254 (சி.எஸ்.ஆர்.) புகார் பெற்றதற்கான ஒப்புதல் சீட்டும் அளிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 48 வழக்குகள் பதிவானது. இதில், ரூ.1 கோடியே 19 லட்சத்து 8 ஆயிரத்து 785-க்கு மோசடி நிகழ்ந்துள்ளது. அதேபோல், இந்த ஆண்டு இதுவரைக்கும் 48 வழக்குகள் பதிவான நிலையில், ரூ. 2 கோடியே 14 லட்சத்து 11 ஆயிரத்து 569 வரைக்கும் மோசடி நிகழ்ந்தள்து. இதில் கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெயர்களிலேயே பணம் மோசடி செய்த வழக்குகளும் உள்ளன.


Next Story