உழவன் செயலி சேவைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்-விவசாயிகளுக்கு, கலெக்டர் அறிவுறுத்தல்


உழவன் செயலி சேவைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்-விவசாயிகளுக்கு, கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 25 July 2023 8:31 PM GMT (Updated: 26 July 2023 11:30 AM GMT)

உழவன் செயலி சேவைகளை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கார்மேகம் அறிவுறுத்தி உள்ளார்.

சேலம்

குறைதீர்க்கும் கூட்டம்

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று கூட்ட மன்றத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார். மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 997.9 மில்லி மீட்டர். இதுவரை 318 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

விவசாயிகளுக்கு நெல், பயிறு உள்ளிட்ட விவசாய விதை பொருட்கள் அனைத்தும் போதுமான அளவு இருப்பு உள்ளன. யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட இடு பொருட்களும் உள்ளது. மேலும் விவசாயிகள் உழவன் செயலி சேவைகளை பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை அதிக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஏரி ஆக்கிரமிப்பு

முன்னதாக கூட்டத்தில் விவசாயி வரதராஜ் கூறும் போது குமரகிரி ஏரியில் 40 ஏக்கர் பரப்பளவில் நீர் பரப்பளவு இருந்தது. தற்போது ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு 20 ஏக்கர் அளவில் மட்டுமே நீர் பரப்பளவு உள்ளது. எனவே ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் ரூ.31 கோடியில் ஏரி புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை தரமாக மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விவசாயி பெருமாள் பேசும் போது, மழை காலம் தொடங்கி உள்ளதால் ஏரி, குளம், குட்டைகளை தூர் வாரவேண்டும். ஒரு லிட்டர் பால், தண்ணீர் 2-ம் ரூ.30-க்கு விற்கப்படுகிறது. எனவே ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.50 வழங்க வேண்டும். தலைவாசல் பகுதியில் நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும் என்றார்.

விவசாயி கோவிந்தன், காட்டுக்கோட்டை பகுதியில் புதிய சேகோசர்வ் ஆலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ள திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறினார். இதே போன்று விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.

சிறு தானிய உணவு

வழக்கமாக கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாய உற்பத்தி பொருட்கள் கண்காட்சி நடைபெறும். நேற்று நடைபெற்ற கண்காட்சியில் தக்காளி ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்டன. கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நேற்று மதியம் கம்பு உள்ளிட்ட சிறுதானிய உணவு வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம், கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் ரவிக்குமார், தோட்டக்கலை துணை இயக்குனர் மாலினி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story