குமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்


குமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
x

குமரியில் இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்.

கன்னியாகுமரி,

புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான குமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.

இந்நிலையில்‌ தற்போது சீசன் காலம் மற்றும் விடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரியில் இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். மேகமூட்டம் காரணமாக சூரியன் உதயமான காட்சியை பார்க்க முடியாமல் இவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அதனைத் தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட படகு துறையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து படகில் சென்று பார்வையிட்டனர்.

மேலும், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story