விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்


விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்
x
தினத்தந்தி 29 Sep 2022 6:45 PM GMT (Updated: 29 Sep 2022 6:45 PM GMT)

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

பயிர் காப்பீடு

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் நடப்பு 2022-23 ராபி பருவத்தின் நெல், மிளகாய், நிலக்கடலை, வாழை, கரும்பு மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு பதிவு செய்வதற்கான அறிக்கை அரசால் வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு சம்பா பருவத்தில், பயிர்க்காப்பீடு திட்டத்தினை, சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்திட பஜாஜ் அலையன்ஸ் பொதுக்காப்பீட்டு நிறுவனம் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நெல் 11 பயிருக்கு, 1 ஏக்கருக்கான விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை ரூ.438.57 எனவும் நெல் பயிருக்கான 100 சதவீத இழப்பீடு காப்பீட்டு தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.29237 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை பயிருக்கு 1 ஏக்கருக்கான பிரீமியம் ரூ.340.36-ம், மிளகாய் பயிருக்கு ரூ.1259.46-ம், சின்னவெங்காயம் பயிருக்கு ரூ.1409.40-ம், வாழை பயிருக்கு ரூ.2408.98-ம், கரும்புக்கு ரூ.2728.84-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யலாம்

நெல் 11 பயிருக்கு காப்பீடு பதிவு செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 15-ந் தேதி எனவும், நிலக்கடலை மற்றும் மிளகாய் பயிர்களுக்கு டிசம்பர் 31-ந் தேதி எனவும், வெங்காயம் பயிருக்கு ஜனவரி 31-ந் தேதி எனவும், வாழைக்கு பிப்ரவரி 28-ந் தேதி எனவும் மற்றும் கரும்புக்கு மார்ச் 31-ந் தேதி வரையிலும் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே, விவசாயிகள், நடப்பு பருவ சாகுபடி அடங்கல், கருத்துரு படிவம், ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகலுடன் அருகாமையிலுள்ள கூட்டுறவு மற்றும் வர்த்தக வங்கிகள் அல்லது பொது சேவை மையங்களில் பிரீமியம் தொகையினை செலுத்தி, உரிய காலக்கெடுவுக்குள் தங்கள் பயிரினை காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்.

உரிய காலக்கெடு

கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகளுக்கு ஒரே அளவிலான பிர்மியம் தொகை மற்றும் காலக்கெடுவே நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்களின் விருப்பத்தின் பேரில் பயிரினை காப்பீடு செய்து, இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்து கொள்ளலாம்.

நெல் 11 பயிருக்கு காப்பீடு பதிவு செய்வதற்கான இறுதி நாள் நவம்பர் 15-ந் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் உரிய காலக்கெடுவுக்குள் நெல் பயிரினை காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story