மரக்காணம் விஷ சாராய கொலை வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை தொடங்கியது


மரக்காணம் விஷ சாராய கொலை வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை தொடங்கியது
x
தினத்தந்தி 19 May 2023 6:45 PM GMT (Updated: 19 May 2023 6:46 PM GMT)

மரக்காணம் விஷ சாராய கொலை வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடங்கியது.

விழுப்புரம்

விழுப்புரம்;

மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்ததில் 13 பேரும், செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் விஷ சாராயம் குடித்த 8 பேரும் இறந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரிகளான மரக்காணத்தை சேர்ந்த அமரன், ஆறுமுகம், முத்து, ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் மற்றும் சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்த புதுச்சேரி ராஜா என்கிற பர்கத்துல்லா, தட்டாஞ்சாவடி ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளையநம்பி உள்ளிட்ட 11 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டதன்பேரில் கைதான 15 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது

இதனிடையே இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் விழுப்புரத்திற்கு நேரில் வந்து இவ்வழக்கின் தன்மை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாருடன் ஆலோசனை நடத்தி சில அறிவுரைகளை வழங்கினார். இதனை தொடர்ந்து நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி, சி.பி.சி.ஐ.டி. போலீசாருடன், இவ்வழக்கு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் இவ்வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர்.

கெமிக்கல் தொழிற்சாலையில்

இளையநம்பிக்கு சொந்தமான சென்னையில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலைக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த தொழிற்சாலை எவ்வளவு ஆண்டுகளாக இயங்கி வருகிறது, இங்கிருந்து யார், யாருக்கெல்லாம் மெத்தனால் சப்ளை செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.


Next Story