சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் கோசாலைகளுக்கு அனுப்பப்படும் - கோவை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்தால் கோசாலைகளுக்கு அனுப்பப்படும் என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
கோவை,
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை அரும்பாக்கம் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு, சிறுமியை தாக்கியது. இந்த சம்பவத்தையடுத்து பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் சாலைகளிலோ அல்லது மக்கள் கூடும் பொது இடங்களிலோ மாடுகள் சுற்றித்திரிந்தால் மாநகராட்சி ஊழியர்கள் அல்லது வ.உ.சி பூங்காவைச் சேர்ந்த ஊழியர்களைக் கொண்டு மாடுகள் பிடிக்கப்பட்டு கோசாலைகளுக்கு அனுப்பப்படும் என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மைக்காலமாக கோவை மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர்களை எச்சரித்து அவர்களிடம் ஒப்படைத்து வந்தனர். ஆனால் இனிமேல் மாடுகள் அப்படி பொதுவெளியில் சுற்றி திரிந்தால் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம் மாடுகள் கோசலைகளுக்கு அனுப்பப்படும் என்று எச்சரித்து மாநகராட்சி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.