நாட்டு துப்பாக்கி, 3 தோட்டாக்கள் பறிமுதல்
கூடலூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி, 3 தோட்டாக்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தொழிலாளியை கைது செய்தனர்.
கூடலூர்,
கூடலூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி, 3 தோட்டாக்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தொழிலாளியை கைது செய்தனர்.
வனவிலங்குகள் வேட்டை
கூடலூர் பகுதியில் கள்ள துப்பாக்கிகள் மூலம் வனவிலங்குகள் வேட்டை அதிகமாக நடைபெறுவதாக நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்துக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கள்ள துப்பாக்கிகள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ரகசிய தகவலின் பேரில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கூடலூர் அருகே பால்மேடு பகுதியில் தேவாலா தனிப்படையினர் துப்பாக்கி மற்றும் மான் இறைச்சி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோல் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லமலை பகுதியில் இரவு நேரத்தில் கள்ள துப்பாக்கி பயன்படுத்துவதாக மாவட்ட காவல்துறைக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
துப்பாக்கி பறிமுதல்
இதையடுத்து தனிப்படை போலீசார் எல்லமலை பகுதியில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது ஒரு வீட்டுக்குள் புகுந்து திடீரென சோதனை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் கள்ள துப்பாக்கி மற்றும் 3 தோட்டாக்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மானு கோயா மகன் அப்துல் சாகர் என்ற பாவா (வயது 33) என்ற தொழிலாளியை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து நாட்டு துப்பாக்கி, 3 தோட்டாக்கள், இரும்பு கம்பியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் நியூஹோப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நியூஹோப் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் சாகர் என்ற பாவாவை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.