ரூ.1 கோடிக்கு பருத்தி கொள்முதல்


ரூ.1 கோடிக்கு பருத்தி கொள்முதல்
x

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. ஏலத்தில் ரூ.12,289-க்கு பருத்தி விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மயிலாடுதுறை

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது. ஏலத்தில் ரூ.12,289-க்கு பருத்தி விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பருத்தி சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு 4 ஆயிரத்து 986 எக்டேர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது பெரும்பான்மையான விவசாயிகள் பருத்தி அறுவடை பணியை முடித்துவிட்டனர். இந்த நிலையில், தாங்கள் விளைவித்த பருத்தியை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

அதன்படி செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 'இ-நாம்' என்று அழைக்கப்படும் மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தை மூலம் பருத்தி மறைமுக ஏலம் விடப்பட்டது.

வியாபாரிகள் பங்கேற்பு

இதில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் கொண்டுவந்த பருத்தியை ஏலத்துக்கு வைத்திருந்தனர். தஞ்சை, நாகை, சேலம், விழுப்புரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மில் அதிபர்களும், வியாபாரிகளும் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

அதிகபட்சமாக ஒரு குவிண்டாலுக்கு ரூ.12 ஆயிரத்து 289-க்கு பருத்தி விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரத்து 984-க்கும், சராசரியாக ரூ.11 ஆயிரத்து 650-க்கும் பருத்தி விலைபோனது. இந்த ஏலம் மூலமாக மொத்தம் 850 குவிண்டால் பருத்தி ரூ.1 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story