கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரை கைது செய்ய உத்தரவு
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரை கைது செய்ய சேலம் தொழிலாளர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சேலம்,
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரை கைது செய்ய சேலம் தொழிலாளர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1998-ம் ஆண்டு சேலத்தை சேர்ந்த தெய்வராணி என்ற பெண் தொகுப்பூதிய பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். அவரை கடந்த 2011-ம் ஆண்டு பல்கலைக்கழக பதிவாளர் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார். இந்த நிலையில், காழ்ப்புணர்ச்சி காரணமாக பணி நீக்கம் செய்துள்ளதாகவும், தனக்கு மீண்டும் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தெய்வராணி, கடந்த 2013-ம் ஆண்டு சேலம் தொழிலாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, 2021-ம் ஆண்டு தெய்வராணியை மீண்டும் பணியில் சேர்க்க பதிவாளருக்கு உத்தரவிட்டது. ஆனால் பதிவாளர் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாமலும், எந்தவித பதிலும் கூறாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்போதைய பதிவாளர் தங்கவேலு மீது, தெய்வராணி கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சேலம் தொழிலாளர் கோர்ட்டு, தங்கவேலுவை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணை வரும் ஏப்ரல் மாதம் 5-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கவேலு தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறை தலைவராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.