வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தயாரிக்க கருத்து கேட்பு கூட்டம்; 7 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு


வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தயாரிக்க கருத்து கேட்பு கூட்டம்; 7 மாவட்ட விவசாயிகள் பங்கேற்பு
x

வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தயாரிக்க நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் 7 மாவட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு

கருத்து கேட்பு கூட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2023-24 வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தயாரிக்க செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோரிடம் கருத்து கேட்பு கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வரவேற்று பேசினார். வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் சமயமூர்த்தி விளக்கவுரையாற்றினார்.

நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வேளாண்மை துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகளிடம் கருத்துகளை கேட்டார்.

ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம்

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும், கரும்பு வெட்டு கூலியை அரசே ஏற்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் 20 சதவீதம் நிதியை நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். டிராக்டர் உள்பட விவசாய வாகனங்கள் வாங்கும் போது மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

செங்கல்பட்டு காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளை தூர் வார வேண்டும், பாரம்பரிய நெல்லை அரசு கொள்முதல் செய்ய வேண்டும், விவசாயத்திற்கு வழங்குவது போல தோட்டக்கலை துறைக்கும் மின்சாரம் வழங்க வேண்டும்,

திருவண்ணாமலையில் நறுமண தொழிற்சாலை அமைக்க வேண்டும், டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் கருவிகளை வட்டார அளவில் வாடகைக்கு விடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், அரசு வேளா ண்மை கல்லூரியில் விவசாயிகளின் மகன்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை 7 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டத்தில் தெரிவித்தனர்.

விவசாயிகளின் கருத்துக்களை கேட்ட பிறகு பின்னர் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:- 2023-2024-ஆண்டு வேளா ண்மை தனி பட்ஜெட் தயாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளிடம் மண்டல வாரியாக கருத்து கேப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. விவசாயிகளிடம் கேட்கப்பட்ட கருத்துக்கள்படி 2023-24-க்கான வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தயாரிக்கப்படும். ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் வழங்க முதல்-அமைச்சர் விரைவில் நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story