வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்


வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
x

வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023 தொடர்பாக வாக்காளர் பட்டியல் பார்வையாளர், தொழிலாளர் ஆணையர், அரசு முதன்மை செயலாளர் டாக்டர் அதுல் ஆனந்த் தலைமையில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி பொதுமக்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தங்களுக்கு உரிய படிவங்களை பூர்த்தி செய்து நேரடியாக தங்கள் பகுதியில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அல்லது சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் வரும் 8-ந்தேதி வரை அனைத்து அலுவலக நாட்களிலும் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தத்தில் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கும், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அறிவுறை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பரமேஸ்வரி, திருவள்ளூர் சப்-கலெக்டர் மகாபாரதி, பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், திருத்தணி ஆர்.டி.ஓ. ஹர்ஷத் பேகம், அம்பத்தூர் ஆர்.டி.ஓ. பிரவீனா குமாரி, உதவி ஆணையர் ராஜேஸ்வரி, உதவி ஆணையர் சங்கரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story