மத்திய அரசை கண்டித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் கைது
மத்திய அரசை கண்டித்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, அரிசி, பால் உள்பட அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை சின்னமலையில் உள்ள வேளச்சேரி சாலையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முத்தழகன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, துணை தலைவர் ஆ.கோபண்ணா, அகில இந்திய செயலாளர் சி.டி.மெய்யப்பன், மாநில பொதுச்செயலாளர்கள் எஸ்.காண்டீபன், தளபதி பாஸ்கர், மாநில செயலாளர் அகரம் கோபி, மாவட்ட தலைவர் நாஞ்சில் பிரசாத், ஆர்.டி.ஐ. பிரிவு துணை தலைவர் மயிலை தரணி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்து மதம்
ஆர்ப்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசும்போது, "பாசிசத்தின் உச்சக்கட்டத்தில் மோடி அரசு இருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மோடிக்கு எமனாக மாறிவிட்டது. இலவசமாக கொடுக்கப்படும் அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்தால் விலைவாசி உயர்வு வராதா? நிர்ணயிக்கப்பட்ட தொகை கிடைக்கவில்லை என்று கூறுவதால் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை ரத்து செய்துவிட்டு, 3 மாதம் கழித்து மீண்டும் நடத்தவேண்டும்.
மதம் வேண்டாம் என்று சொல்லவில்லை. இந்து மதம் எங்களுக்கு சொந்தமானது. அதில் நீங்கள் புகவேண்டாம். கட்டுப்பாடு வந்தால் காங்கிரஸ் கட்சி, ராணுவத்தோடு வலிமையாகிவிடும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் சிறப்பான கூட்டணியை உருவாக்கியதால், அவர்களால் இங்கு வெற்றி பெறமுடியவில்லை. அதிகாரத்தில் இருந்து வீழ்ந்தால் மோடி, முகவரி இல்லாமல் போய்விடுவார். அராஜகமான மோடி ஆட்சியை வலிமையான பரப்புரை மூலம் அகற்றவேண்டும்" என்றார்.
காங்கிரசார் கைது
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், "அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி வசூலிப்பதால் ஏழைகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. இன்னும் கொஞ்சம் ஏமாந்தாலும் தாய்ப்பாலுக்கும் ஜி.எஸ்.டி. வரி போட்டுவிடுவார்கள். மோடியும், அமித்ஷாவும் அம்பானிக்காகவும், அதானிக்காகவும் மட்டுமே ஆட்சி நடத்துகிறார்கள். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருப்பதால் நாம் நிம்மதியாக இருக்கிறோம். மற்ற மாநிலங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது. மோடியையும், அமித்ஷாவையும் வீட்டுக்கு அனுப்பினால்தான் நாட்டுக்கு மோட்சம் கிடைக்கும்" என்றார்.
ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகையிடுவதற்காக அணிவகுத்து சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரசார் அந்த பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.