பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காங்கிரஸ் தலைவர் கைது


பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காங்கிரஸ் தலைவர் கைது
x

கொடைக்கானலில் தங்கியிருந்த பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

மாவட்ட காங்கிரஸ் தலைவர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் அப்துல்கனி ராஜா (வயது 50). இவர் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக உள்ளார். மேலும் கொடைக்கானல் ஓட்டல் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவராகவும் பதவி வகிக்கிறார். இவருக்கு சொந்தமான 2 தங்கும் விடுதிகள் நாயுடுபுரம் பகுதியில் உள்ளன.

இந்தநிலையில் சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பெண் வக்கீல் ஒருவர் தனது 2 குழந்தைகள் மற்றும் தோழி, அவரது குழந்தைகளுடன் கொடைக்கானலுக்கு கடந்த 7-ந்தேதி சுற்றுலா வந்தனர்.

அறையில் இருந்த பெண் வக்கீல்

கொடைக்கானல் நாயுடுபுரத்தில் உள்ள அப்துல்கனி ராஜாவின் தங்கும் விடுதியில் அவர்கள் தங்கினர். பெண் வக்கீல் தனது குழந்தைகளுடன் ஒரு அறையிலும், அவரது தோழி தனது குழந்தைகளுடன் மற்றொரு அறையிலும் தங்கி இருந்தனர்.

பெண் வக்கீலுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர், சுற்றுலா இடங்களை பார்க்க வெளியே செல்லவில்லை. அறையிலேயே தங்கி இருந்தார். அவரது குழந்தைகள், தோழி மற்றும் அவரது குடும்பத்தினர் சுற்றுலா இடங்களை பார்க்க சென்று விட்டனர்.

பாலியல் தொல்லை

இதற்கிடையே பெண் வக்கீல் தங்கியிருந்த அறையில் 'வைபை' வசதி செயல் இழந்து விட்டது. இதுதொடர்பாக அந்த பெண் வக்கீல், அப்துல்கனி ராஜாவிடம் போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சிறிதுநேரத்தில் பெண் வக்கீல் தங்கியிருந்த அறைக்கு அப்துல்கனிராஜா வந்தார்.

அப்போது, உடல் நிலை சரியில்லாமல் இருந்த பெண் வக்கீலின் உடலை பரிசோதிப்பது போல அவரது ஆடைகளை விலக்கி அப்துல்கனி ராஜா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண் வக்கீல் அதிர்ச்சி அடைந்தார்.

கைது-விசாரணை

இதுகுறித்து தனது கணவர் மற்றும் குழந்தைகள், தோழி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அந்த அறையை காலி செய்து விட்டு வேறு தங்கும் விடுதிக்கு சென்றனர். பின்னர் இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் பெண் வக்கீல் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அப்துல்கனி ராஜாவை கைது செய்தனர். அவரிடம், திண்டுக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

மயங்கி விழுந்தார்

விசாரணைக்கு பிறகு, கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அப்துல்கனி ராஜாவை போலீசார் அழைத்து சென்றனர். அப்போது போலீஸ் நிலைய வாசலிலேயே அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனைக்கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து போலீசார் மற்றும் உறவினர்கள், அப்துல்கனி ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர், கொடைக்கானல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி கார்த்திக் உத்தரவிட்டார். அதன்பேரில், திண்டுக்கல் மாவட்ட சிறையில் அப்துல்கனிராஜா அடைக்கப்பட்டார்.

கூடுதல் சூப்பிரண்டு விசாரணை

இதற்கிடையே பெண் வக்கீல் தன்மீது தவறான புகார் அளித்திருப்பதாக அப்துல்கனி ராஜா கொடைக்கானல் போலீசில் புகார் அளித்தார். இதேபோல் அவரது மனைவி மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த பிரமுகர்களும் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகார்கள் தொடர்பாக, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் வக்கீலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story