மாலைமாடு நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதல்


மாலைமாடு நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதல்
x

மாலைமாடு நிகழ்ச்சியில் இருதரப்பினர் மோதல் ஏற்பட்டது.

திருச்சி

உப்பிலியபுரம்:

மோதல்

உப்பிலியபுரத்தை அடுத்த புடலாத்தியில் உள்ள மாரியம்மன், சடச்சியம்மன், மாலைகருப்பு கோவில்களில் புதுப்பொங்கல், மாலைமாடு தொட்டி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாலைமாடு தொட்டி நிகழ்ச்சியின்போது அலங்கரிக்கப்பட்ட பசுக்கள் ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் சென்று, தொட்டியில் வைக்கப்பட்ட தீவனத்தை தின்றபின்னர், பூஜை செய்யப்படும்.

இந்நிலையில் கோவிலில் பொங்கல் படையல் வைத்தல், மாலைமாடு ஊர்வலம் ஆகியவற்றின்போது ஒரு சமூகத்தினரை ஒதுக்கி வைப்பதாக புகார் எழுந்தது. ஆனால் தொன்று தொட்டு நடைபெற்று வரும் வழக்கத்தை மாற்ற முடியாது என்று மற்றொரு சமூகத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

சமரசம்

இது பற்றி தகவல் அறிந்த துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் செபஸ்டின் சந்தியாகு, பிரபாகரன் ஆகியோர் போலீசாருடன் அங்கு விரைந்து வந்து இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டது.

இதையடுத்து நிகழ்ச்சி சுமுகமாக நடைபெற்று முடிந்தது. நிகழ்ச்சியின்போது அலங்கரிக்கப்பட்ட பசுக்கள் வீடுகள் தோறும் சென்றன. அவற்றுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


Next Story