கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 7½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற   7½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 7½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 7½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன சோதனை

நித்திரவிளை போலீஸ் நிலைய தனிப்பிரிவு ஏட்டு ஜோசுக்கு, விரிவிளை கணபதியான்கடவு பாலம் வழியாக டெம்போ மூலம் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்தது.

அதைத்தொடர்ந்து நித்திரவிளை போலீசார் நேற்று அதிகாலை 5 மணியளவில் விரிவிளை கணபதியான் கடவு பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மீன்பாடி டெம்போ வந்தது.

ரேஷன் அரிசி பறிமுதல்

அதை போலீசார் நிறுத்த கூறிய போது, டிரைவர் டெம்போவை நிறுத்தாமல் செல்ல முயன்றார். உடனே அந்த வாகனத்தை போலீசார் சுற்றி வளைத்தனர்.

உடனே டெம்போவை நிறுத்தி விட்டு டிரைவர் கீழே இறங்கி ஓடி விட்டார். அதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாகனத்தின் பின்பக்க கதவை திறந்து சோதனை செய்த போது, அதில் மூடைகளில் சுமார் 4 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 4 டன் ரேஷன் அரிசியுடன் டெம்போவை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் ரேஷன் அரிசி மூடைகள் மற்றும் டெம்போ கிள்ளியூர் வட்டவழங்கல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதுக்கடை

இதே போல் புதுக்கடை போலீஸ் நிலைய தனிப்பிரிவு ஏட்டு சுனில் ராஜ் மற்றும் போலீசார் இணையம் புத்தன்துறை பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஜெயந்தி என்பவரது வீட்டில் 1½ டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் பாழடைந்த வீட்டில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு ரேஷன் அரிசியை அதே பகுதியை சேர்ந்த ஸ்டான்லி என்பவர் பதுக்கி வைத்ததும் தெரிய வந்தது. அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 3½ டன் ரேஷன் அரிசியும் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story