ஊராட்சி ஒன்றியங்களில் 10 ஆண்டிற்கும் மேலாகப் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான்


ஊராட்சி ஒன்றியங்களில் 10 ஆண்டிற்கும் மேலாகப் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய  வேண்டும் - சீமான்
x

ஊராட்சி ஒன்றியங்களில் 10 ஆண்டிற்கும் மேலாகப் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

சீமான் வெளியிட்ட அறிக்கையில்,

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பத்தாண்டிற்கும் மேலாகப் பணிபுரியும் கணினி உதவியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் தமிழ்நாடு அரசின் மெத்தனப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஊராட்சி முகமையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிய, 2007 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் கணினி உதவியாளர்கள் தமிழ்நாடு அரசால் பணியமர்த்தப்பட்டனர்.

பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற உறுதிமொழியுடன் பணியில் சேர்க்கப்பட்ட நிலையில், கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றியும் கணினி உதவியாளர்களை தமிழ்நாடு அரசு இன்று வரை பணி நிரந்தரம் செய்ய மறுத்து வருவது மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது.

பணி நிரந்தரம் வேண்டி கணினி உதவியாளர்கள் முன்னெடுத்த பல்வேறு கட்ட போராட்டத்திற்குப் பிறகு கடந்த 22.03.17 அன்று பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணையை முந்தைய அதிமுக அரசு வெளி யிட்டபோதும் அரசு இறுதிவரை பணி நிரந்தரம் செய்யாமல் வஞ்சித்தது.

அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக அரசும், முந்தைய அதிமுக அரசினைப் போலவே பணி நிரந்தரம் செய்யாமல் ஏமாற்றி வருவது கணினி உதவியாளர்களுக்கு செய்கின்ற பச்சைத் துரோகமாகும்.

அரசாணை வெளியிட்டு ஆறு ஆண்டுகளாகியும் பணி நிரந்தரம் செய்யாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து கணினி உதவியாளர்கள் வீதியில் இறங்கி பல்வேறு தொடரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக கணினி உதவியாளர்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்தினை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரித்து, கோரிக்கைகள் வெல்லும்வரை துணை நிற்கும் என்று உறுதியளிக்கின்றேன்.

ஆகவே, தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் அரசாணை 37 இன் படி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஊராட்சி முகமையில் பணிபுரியும் 906 கணினி உதவியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமெனவும், ஊதிய உயர்வு, வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அத்தனை அடிப்படை உரிமைகளையும் வழங்கிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




Next Story