குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு சமரசம் என்பதை ஏற்க முடியாது- இன்ஸ்பெக்டர் வசந்தியின் மனு தள்ளுபடி


குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு சமரசம் என்பதை ஏற்க முடியாது- இன்ஸ்பெக்டர் வசந்தியின் மனு தள்ளுபடி
x

குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு சமரசமாக செல்கிறோம் என்பதை ஏற்க முடியாது என்று கூறி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தியின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு விட்டு சமரசமாக செல்கிறோம் என்பதை ஏற்க முடியாது என்று கூறி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தியின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ரூ.10 லட்சம் பறித்த வழக்கு

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்தவர் அர்ஷத். டெய்லரான இவர், தனியாக தொழில் தொடங்குவதற்காக ரூ.10 லட்சம் கடன் வாங்கியிருந்தார். கூடுதலாக தேவைப்பட்ட ரூ.5 லட்சத்தை மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர்கள் தருவதாக கூறினர். எனவே ரூ.10 லட்சத்தையும் எடுத்துக்கொண்டு மதுரை நாகமலைப்புதுக்கோட்டை பகுதிக்கு கடந்த ஆண்டு வந்தார். கடன் தருவதாக கூறியவர்களுக்காக காத்திருந்தார். அந்த வழியாக அப்போதைய நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் வந்தனர்.

அவர்கள், அர்ஷத்திடம் விசாரித்தனர். அப்போது அவர் தனக்கு கடன் தருபவர்களுக்காக காத்திருக்கும் தகவலை தெரிவித்தார். இதையடுத்து அவர் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை அவரிடம் இருந்து மிரட்டி இன்ஸ்பெக்டர் வசந்தி பறித்துக்கொண்டார். இதுகுறித்து வெளியில் சொன்னால் பொய் வழக்கு போட்டு, சிறையில் அடைத்துவிடுவோம் என்றும் மிரட்டினார்.

இதுகுறித்து அர்ஷத், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் அளித்தார். புகாரின்பேரில் விசாரித்து, நாகமலைபுதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் சில மாதங்கள் கழித்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.

ரத்து செய்ய மனு

இந்தநிலையில் வசந்தி, பால்பாண்டி, உக்கிரபாண்டி, சீமைச்சாமி என்ற கார்த்திக் உள்ளிட்டோர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், எங்கள் மீது புகார் அளித்தவரும், நாங்களும் சமரசமாக செல்வது என பேசி தீர்வு கண்டுள்ளோம். எனவே கீழ்கோர்ட்டில் நிலுவையில் உள்ள எங்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

சமரசத்தை ஏற்க முடியாது

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, மனுதாரர் போலீஸ் துறையில் பணியில் இருந்தபோது, பணம் பறித்த சம்பவத்தில் மனுதாரர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு, சமரசமாக செல்கிறோம் என்பது ஏற்கத்தக்கதல்ல என்றார்.

இதையடுத்து இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

கடைசியாக இடம்பெற்ற வசந்தி

ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் முதல் குற்றவாளியாக இன்ஸ்பெக்டர் வசந்தி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் அவர் பெயர் முதலாவதாக சேர்க்கப்பட்டால், தங்களின் கோரிக்கை நிராகரிக்கப்படலாம் என்பதால், அவருடைய பெயரை மனுவின் கடைசி நபராக சேர்த்து இருந்தனர். ஆனாலும் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை கருத்தில் கொண்டு இந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story