வருகிற ஜூன் மாதத்திற்குள் முழுமையாக தாமிரபரணி குடிநீர் வினியோகம்
விருதுநகரில் வருகிற ஜூன் மாத இறுதிக்குள் முழுமையாக தாமிரபரணி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என ஆணையாளர் ஸ்டான்லி பாபு உறுதியளித்துள்ளார்.
விருதுநகரில் வருகிற ஜூன் மாத இறுதிக்குள் முழுமையாக தாமிரபரணி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என ஆணையாளர் ஸ்டான்லி பாபு உறுதியளித்துள்ளார்.
காலாண்டு கூட்டம்
விருதுநகர் நகராட்சி அளவிலான தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் முதல் காலாண்டு கூட்டம் விருதுநகர் நகராட்சி அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆணை யாளர் ஸ்டான்லி பாபு, என்ஜினீயர் மணி மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினர் அழகு சுந்தரம், நுகர்வோர் அமைப்பை சேர்ந்த மாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய நுகர்வோர் பாதுகாப்பு குழு உறுப்பினர் அழகு சுந்தரம் பேசியதாவது;-
நகர் மக்கள் ஆனைக்குட்டம் குடிநீரால் பாதிப்பு ஏற்படுகிறது என்று புகார் கூறும் நிலையில் ஆனைக்குட்டம் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதை தவிர்த்து தாமிரபரணி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
குடிநீர் மையம்
மேலும் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு நிரந்தர குடிநீர் வசதி இல்லாத நிலையில் அங்குள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். புதிய பஸ் நிலையம் செயல்படாத நிலையில் நகராட்சி நிர்வாகம் அதற்கான பராமரிப்பு செலவுகளை செய்துவரும் நிலையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பொது மக்களுக்கான சேவைகளை தாமதமின்றி வழங்க வேண்டும். நகரில் உள்தெருவில் செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டால் அப்பகுதியில் உள்ளோருக்கு பாதிப்பு ஏற்படுவதால் அதனை அருப்புக்கோட்டை ரோடு சந்திப்பில் உள்ள நகராட்சி இடத்திற்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முழுமையான வினியோகம்
இதற்கு கமிஷனர் ஸ்டான்லி பாபு பதிலளித்து பேசுகையில், விருதுநகர் நகராட்சி பகுதிக்கு கூடுதல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் வருகிற ஜூன் மாத இறுதிக்குள் முடிவடையும் நிலையில் ஜூன் மாத இறுதியில் முழுமையாக தாமிரபரணி குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
காய்கறி மார்க்கெட் ராமமூர்த்தி ரோட்டில் நகராட்சி இடத்திற்கு மாற்றுவதற்காக மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும் அரசு அனுமதி கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.