விழுப்புரம்: குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் - விசாரணையில் வெளியான உண்மை


குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக எழுந்த புகாரில் அது தேன் அடை என்பது உறுதி
x
தினத்தந்தி 15 May 2024 6:14 AM GMT (Updated: 15 May 2024 7:01 AM GMT)

விழுப்புரத்தில் குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் விசாரணையில் அது தேன் அடை என்பது உறுதியானது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர். பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்பட்டதாக ஊர் மக்கள் இன்று புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார், கிராம நிர்வாக அலுவலகர், கூடுதல் ஆட்சியர் உள்பட பல்வேறு அதிகாரிகள் கே.ஆர். பாளையம் கிராமத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அந்த ஆய்வில் குடிநீர் கிணற்றில் மனித மலம் கலக்கப்படவில்லை என்பது உறுதியானது. மேலும், கிணற்றுக்குள் தேன் அடை கிடந்துள்ளது. அதை மனித மலம் என கிராம மக்கள் தவறாக கருதி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதேவேளை, கிணற்று நீர் பாதுகாப்பானதாக உள்ளது என்றும் கிணற்றை சுற்றிலும் இரும்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கலெக்டர் தெரிவித்துள்ளார்.


Next Story