பிரபல நகைக்கடை ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்


பிரபல நகைக்கடை ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்
x

பிரபல நகைக்கடை ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார் கூறி, வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

பிரபல நகைக்கடை

திருச்சியை தலைமையிடமாக கொண்டு சென்னை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், கும்பகோணம், புதுச்சேரி உள்பட 7 இடங்களில் பிரபல நகைக்கடை செயல்பட்டு வந்தது. இங்கு ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம் மாதந்தோறும் ரூ.10 ஆயிரமும், 10 மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கமும் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டனர்.

இதனை நம்பி பலரும் ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் முதலீடு செய்தவர்களுக்கு வட்டிக்கான காசோலைகளை வழங்கினர். ஆனால் கடந்த 2 மாதமாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட காசோலைகள் பணமில்லாத காரணத்தால் திரும்பி வந்தது. இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு ஓரிரு வாரங்களில் பணம் கொடுத்து முடிப்பதாக நகைக்கடை சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் பணம் வழங்கப்படவில்லை. மேலும் பலர் நகைச்சீட்டிலும் சேர்ந்து பணம் கட்டி வந்தனர்.

ரூ.100 கோடிக்கு மேல் மோசடி

இந்நிலையில் திருச்சி கடை தவிர, மற்ற கடைகள் அனைத்தும் திடீரென மூடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் திருச்சியில் உள்ள நகைக்கடை முன்பாக நேற்று முன்தினம் மாலை திரண்டனர். பின்னர் நகைக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த நகைக்கடையில் ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ள நிலையில் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் முற்றுகை போராட்டம் நடந்த நிலையில், நேற்று காலையிலும் ஏராளமான வாடிக்கையாளர்கள் மீண்டும் கே.டி.ஜங்ஷன் நான்குரோடு சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். முறைப்படி புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story