தோட்டக்குறிச்சியில் சமுதாயக்கூடம் -மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவ-மாணவிகள்
தோட்டக்குறிச்சியில் அரசு பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது. இதனால் சமுதாய க்கூடம் மற்றும் மரத்தடியில் அமர்ந்து மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு இட நெருக்கடியால் அவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
கட்டிடம் சேதமடைந்தது
கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சியில் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவாக கடந்த 1962-ம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இந்த பள்ளியை அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் திறந்து வைத்தார். இங்கு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 60 ஆண்டுகள் ஆனாதால் வகுப்பறைக்குள் ஆங்காங்கே கட்டிட கான்கிரீட்டுகள் பெயர்ந்து விழுந்து வந்தது.
மேற்கூரையில் இருந்த ஓடுகள் உடைந்து ஓட்டை விழுந்திருந்தது. மழை பெய்யும் போதெல்லாம் வகுப்பறைக்குள் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் மாணவ, மாணவிகள் நனைந்து கொண்டு வகுப்பறையில் ஓரமாக நின்று பாடம் படித்து வந்தனர்.
பள்ளிக்கூடமாக மாறிய சமுதாய கூடம்
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சுமார் 75 மாணவ, மாணவிகள் படித்து வந்த வகுப்பறை கட்டிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு இடிக்கப்பட்டது. ஆனால் இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை கட்டுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து ஆசிரியர்களின் முயற்சியில் தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்கு சொந்தமான 2 சமுதாய கூடத்தை பள்ளிக்கூடமாக மாற்றி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான 75 மாணவ, மாணவிகளுக்கு அங்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
கோரிக்கை
சமுதாய கூடமாக இருந்தபோது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீட்டு திருமண விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். தற்போது பள்ளி கூடமாக செயல்பட்டு வருவதால் அவர்கள் அதிக பணி கொடுத்து வெளியில் திருமண மண்டபங்களை பிடித்து நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் சமுதாய கூடத்தில் இடபற்றாக்குறையால் மாணவ-மாணவிகள் பலர் மரத்தட்டியிலேயே இருந்து பாடம் படித்து வருகின்றனர்.
மேலும் மதிய உணவையும் மரத்தடியில் அமர்ந்து சாப்பிட வேண்டிய நிலைய உள்ளது. அப்போது மரங்கள் சாய்ந்து விழுந்தால்அசம்பாவித சம்பவம் ஏற்பட அதிக வாய்ப்ப உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறி கருத்துகள் பின்வருமாறு:-
அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை
மூர்த்தி:- கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு தோட்டக்குறிச்சியில் அரசு பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்த பள்ளிக்கூடத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் படித்து வந்தனர்.
இந்நிலையில் அந்த பள்ளியில் படித்தவர்கள் இப்பொழுது தொழிலதிபர்களாகவும் மற்றும் பல்வேறு அரசு பணிகளில் இருந்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து போட்டு விட்டு சென்று விட்டனர். அதன்பின்னர் எந்த அதிகாரியும் கண்டு கொள்ளவில்லை.
பல்வேறு தடைகள் வந்தன
மணி :-தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலை பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் மாணவ-மாணவிகள் கடந்த சமுதாய கூடத்தில் அமர்ந்து படித்து வருகின்றனர். இந்த இடமும் பற்றாக்குறையாக உள்ளது. தொடர்ந்து சமுதாயக்கூடத்திலேயே பள்ளிக்கூடத்தை நடத்த இயலாது. இந்த அரசு பள்ளிக்கூடத்தை நடுநிலைப்பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளியாக மாற்றுவதற்கு நாங்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்தோம்.
பலமுறை சென்னைக்கு சென்று அமைச்சர்களை சந்தித்து பல்வேறு மனுக்களை கொடுத்து வந்தோம். அவர்கள் கட்ட சொன்ன தொகையை கட்டி பள்ளிக்கூடத்தை உருவாக்கினோம். அதற்கும் பல்வேறு தடைகள் வந்தன. இருப்பினும் விடாமுயற்சியால் இந்த பள்ளிக்கூடத்தை உருவாக்கினோம். எனவே இடிக்கப்பட்ட இடத்தில் புதிய கட்டிடம் கண்டிப்பாக வேண்டும்.
அதிக செலவு ஆகிறது
சந்திரா:- தோட்டக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நாங்கள் சமுதாய கூடத்தில் குறைந்த கட்டணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம். தற்போது பள்ளியாக செயல்படுவதால் மாணவ, மாணவிகள் அங்கு படித்து வருகின்றனர். நிகழ்ச்சி நடத்துவதற்காக பள்ளி மாணவ-மாணவிகளை வெளியே அனுப்ப முடியாது. இதனால் வெளியே திருமண மண்டபங்களை அதிக செலவு செய்து நிகழ்ச்சி நடத்த வேண்டியது உள்ளது. இதனால் ஒரு பெரும் தொகையை திருமணமண்டபத்திற்கே செல்கிறது. எனவே உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதவ முன்வந்தும் பலனில்லை
ஸ்ரீதரன்:- தோட்டக்குறிச்சியில் உள்ள பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது. அப்போது நேரில் வந்த அதிகாரிகள் இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடம் உடனடியாக உங்களுக்கு புதிதாக கட்டித்தரப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை கட்டிடம் கட்டுவதற்கு எந்த வேலையும் நடைபெறவில்லை. இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தில் வீணான கழிவுகள் கூட அப்படியே பள்ளி வளாகத்திலேயே கிடக்கிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது எங்களது குழந்தைகள் தான். இதற்கிடையில் இடிக்கப்பட்ட கட்டிடத்தை சமூக ஆர்வலர் ஒருவர் தாமாக முன்வந்து தான் கட்டித் தருவதாக கூறியும் அரசு அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருக்கு அனுமதி கொடுத்து இருந்தால் ஓராண்டுக்கு முன்பே அதற்கான வேலை முடிந்து இருக்கும். எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் கட்டி டத்தை விரைந்து கட்டி தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.