'தேர்வு ஒத்தி வைக்கப்படுமோ என்று அச்சப்பட்டோம்'; குரூப்-2 தேர்வு எழுதியவர்கள் கருத்து


தினத்தந்தி 26 Feb 2023 2:00 AM IST (Updated: 26 Feb 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

கேள்வித்தாள் வழங்க தாமதமானதால் தேர்வு ஒத்தி வைக்கப்படுமோ? என்று அச்சப்பட்டோம் என குரூப்-2 தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.

திண்டுக்கல்

கேள்வித்தாள் வழங்க தாமதமானதால் தேர்வு ஒத்தி வைக்கப்படுமோ? என்று அச்சப்பட்டோம் என குரூப்-2 தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் பார்வதீஸ் கலை-அறிவியல் கல்லூரியில் குரூப்-2, 2ஏ தேர்வு எழுதியவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

கேள்வித்தாள் குளறுபடி

சீலப்பாடியை சேர்ந்த காயத்ரி:- குரூப்-2, 2ஏ தேர்வுக்கான பாடங்களை கடந்த சில மாதங்களாக படித்து தேர்வுக்கு தயாராக இருந்தேன். இந்த நிலையில் நேற்று தேர்வு எழுதுவதற்காக காலை 9 மணிக்கே தேர்வு மையத்துக்கு வந்துவிட்டேன். 9.30 மணிக்கு தேர்வு தொடங்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் கேள்வித்தாள் பதிவு எண் குளறுபடியால் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்துக்கு வந்தவர்களுக்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் கேள்வித்தாள் வழங்கப்படவில்லை.

இதனால் நான் உள்பட அனைவரும் பதற்றம் அடைந்தோம். பின்னர் ஒருவழியாக கேள்வித்தாள் வழங்கப்பட்டு தேர்வு எழுதினோம். தேர்வு எழுத தொடங்கிய சிறிது நேரத்தில் பதற்றம் நீங்கியது. பாடத்திட்டங்களுக்கு உட்பட்டே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதனால் தேர்வு எளிமையாக இருந்தது. 2-ம் கட்ட தேர்வுக்கு முன்பு மதிய உணவு சாப்பிட குறைந்த நேரமே வழங்கப்பட்டது. கூடுதல் நேரம் வழங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஒத்தி வைக்கப்படுமோ?

கோபால்பட்டியை சேர்ந்த பூமிநாதன்:- கேள்வித்தாள் பதிவு எண் குளறுபடியால் நீண்ட நேரம் தேர்வு தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் தேர்வு ஒத்தி வைக்கப்படுமோ? என்ற பயம் ஏற்பட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தோம். நல்ல வேளையாக பிரச்சினையை தேர்வு கண்காணிப்பு அதிகாரிகளே சரிசெய்து கேள்வித்தாள்களை வழங்கினர். அதன் பின்னரே நிம்மதியடைந்தேன். தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தால் மீண்டும் தேர்வுக்காக தயாராவது சற்று கடினமாக இருந்திருக்கும். காலையில் நடந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் எளிதில் விடையளிக்கும் வகையில் இருந்தது. மதியம் நடந்த தேர்வில் சற்று யோசித்து பதிலளிக்கும் வகையில் கேள்விகள் இருந்தன.

கூடுதல் நேரம்...

அய்யம்பாளையத்தை சேர்ந்த மகேஷ்வரி:- 2 கட்ட தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் எளிமையாக இருந்தன. காலையில் தேர்வு தொடங்குவதற்கு முன்பு ஏற்பட்ட கேள்வித்தாள் பிரச்சினையால் சற்று பதற்றம் அடைந்தேன். முதல் கட்ட தேர்வு முடிந்ததும் மதிய உணவு இடைவெளி நேரமாக ½ மணி நேரம் தான் ஒதுக்கப்பட்டது. இதனால் பெண்கள் மிகவும் அவதிப்பட்டனர். கூடுதல் நேரம் ஒதுக்கியிருக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story