வழக்கு தாக்கல் முதல் எம்.பி. பதவி பறிப்பு வரை நடந்தது என்ன?"வாய்மொழி அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு வழங்கியதே அதிகபட்ச தண்டனை" 163 ஆண்டு கால குற்றவியல் சட்ட வரலாறு குறித்து ப.சிதம்பரம் விளக்கம்


வழக்கு தாக்கல் முதல் எம்.பி. பதவி பறிப்பு வரை நடந்தது என்ன?வாய்மொழி அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு வழங்கியதே அதிகபட்ச தண்டனை 163 ஆண்டு கால குற்றவியல் சட்ட வரலாறு குறித்து ப.சிதம்பரம் விளக்கம்
x
தினத்தந்தி 3 April 2023 6:45 PM GMT (Updated: 3 April 2023 6:46 PM GMT)

இந்திய குற்றவியல் சட்டம் நிறைவேற்றப்பட்ட 163 ஆண்டுகளில், வாய்மொழி அவதூறுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது இதுவே முதல்முறை என்றும், ராகுல்காந்தி தகுதி நீக்கம் குறித்தும் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை

காரைக்குடி

இந்திய குற்றவியல் சட்டம் நிறைவேற்றப்பட்ட 163 ஆண்டுகளில், வாய்மொழி அவதூறுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது இதுவே முதல்முறை என்றும், ராகுல்காந்தி தகுதி நீக்கம் குறித்தும் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து உள்ளார்.

பேட்டி

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராகுல்காந்திக்கு சூரத் கோர்ட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததும் அதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் அவரது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததும் நாட்டில் உள்ள பெரும்பாலானோருக்கு கவலை அளிக்கும் நிகழ்வாக அமைந்துவிட்டது. இச்செயல் கடும் கண்டனத்திற்கும் ஆளாகியுள்ளது. இதனால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராடும் வாய்ப்பினை மோடி அரசு உருவாக்கி தந்திருக்கிறது.

கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் கோலாரில் தேர்தல் பிரசாரத்தின்போது சில வார்த்தைகளை பேசினார் என்று, 3 நாட்கள் கழித்து, ஏப்ரல் 16-ந் தேதி பூர்ணேஷ் மோடி என்பவர் குஜராத் மாநிலம் சூரத்தில் வழக்கு தொடர்கிறார். 2019-ல் போடப்பட்ட இந்த வழக்கு 2022-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. வழக்கை விசாரிக்கக்்கோரி புகார்தாரர் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

தடையாணை

மேலும் 2022 மார்ச் மாதத்தில் குஜராத் ஐகோர்ட்டில் என்னுடைய வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என பூர்ணேஷ் மோடியே முறையிட்டுள்ளார். கோர்ட்டும் அந்த வழக்கு விசாரணைக்கு தடையாணை பிறப்பித்தது. 2022 மார்ச் மாதத்தில் இருந்து 2023 பிப்ரவரி வரை அந்த தடை இருந்தது.

இதற்கிடையில் சூரத் நீதிபதி மாற்றம் செய்யப்படுகிறார். புதிய நீதிபதி வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் 7-ந்தேதி ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மீதும், ஒரு நிறுவனம் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் முன் வைக்கிறார். அன்று அவர் பேசியதில் பெரும்பாலானவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. அதன் பிறகு 9 நாட்களில் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பூர்ணேஷ்மோடி, குஜராத் ஐகோர்ட்டுக்கு சென்று எனது வழக்கிற்கான தடையை நீக்க வேண்டும், வழக்கு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று கோருகிறார்.

தகுதி நீக்கம் அவசரமாக உத்தரவு

அதன்பேரில் குஜராத் ஐகோர்ட்டு தடையை நீக்கி வழக்கை விசாரிக்க அனுமதி வழங்குகிறது.

அதன்பின் கடந்த பிப்ரவரி 21-ந்தேதி, ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது. கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் விசாரணை முடிந்து, கடந்த 23-ந் தேதி 2 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. தண்டனை விதித்த நீதிபதியே தண்டனையை நிறுத்தியும் வைத்துள்ளார். ஆனால் 24 மணி நேரத்திற்குள் எம்.பி. பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்.

தண்டனையை நிறுத்தி வைத்த அறிவிப்பிற்கு பிறகும் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்யும் உத்தரவு அவசரம் அவசரமாக பிறப்பிக்கப்படுகிறது. அதற்கான உத்தரவை பிறப்பித்தது யார்? என்பது இன்று வரை மர்மமாக உள்ளது.

ஜனாதிபதியோ, தேர்தல் ஆணையமோ அந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை. நாடாளுமன்ற சபாநாயகர் உத்தரவு போட்டாரா? என்பது யாருக்கும் தெரியாது. இதுவே இன்றைய நிலை. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

அதிகபட்ச தண்டனை

இந்திய குற்றவியல் சட்டம் 1860-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதுவரை 163 ஆண்டுகள் ஆகின்றன. 163 ஆண்டுகளில் வாய்மொழி அவதூறு வழக்கிற்காக அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் விதித்தது, நாங்கள் அறிந்தவரை இதுவே முதல்முறை. இந்நிகழ்வு மக்கள் மனதில் கேள்வியையும், ஒருவிதமான உறுத்தலையும் ஏற்படுத்தி உள்ளது.

நீதித்துறையில் ஏற்பட்டு வரும் தலையீடுகளை, அதன் அபாயத்தை புரிந்து கொண்டு சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவின் சட்ட மந்திரி கிரண்ரிஜிஜூ பகிரங்கமாகவே நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார். ஓய்வு பெற்ற நீதிபதிகள், எதிர்க்கட்சிகள் போல் பேசுகின்றனர்-எழுதுகின்றனர், என்கிறார்.

இது நீதித்துறைக்கும் நீதிபதிகளுக்கும் விடப்பட்ட சவாலாகும். இதுகுறித்து சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ., காங்கிரஸ் வக்கீல் பிரிவு மாநில இணைச் செயலாளர் ராமநாதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் முத்தையா, நகர காங்கிரஸ் தலைவர் பாண்டி மெய்யப்பன், மாவட்ட செயலாளர் அப்பாவு ராமசாமி, மாவட்ட துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story