குளம் புனரமைப்பு, வகுப்பறை கட்டுமான பணிகள் கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு


குளம் புனரமைப்பு, வகுப்பறை கட்டுமான பணிகள் கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 10 April 2023 12:45 AM IST (Updated: 10 April 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் ஒன்றியத்தில் நடந்து வரும் குளம் புனரமைப்பு மற்றும் வகுப்பறை கட்டுமான பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் ஒன்றியத்தில் நடந்து வரும் குளம் புனரமைப்பு மற்றும் வகுப்பறை கட்டுமான பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

நாகை மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புஷ்பவனம் ஊராட்சி அழகு கவுண்டர் தெருவில் உள்ள பெருமாள் குளத்தில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டிலும், தேத்தாக்குடி தெற்கு ஊராட்சி தெற்குவெளியில் உள்ள மாங்குளத்தில் ரூ.9.43 லட்சம் மதிப்பீட்டிலும், ஆதனூர் ஊராட்சி அண்டர்காடு கிரமத்தில் உள்ள அய்யர் வீட்டு குளத்தில் ரூ.8.65 லட்சம் மதிப்பீட்டிலும் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது புனரமைப்பு பணிகள், சுற்றுச்சுவர்- படித்துறை கட்டும் பணிகள், கடினல்வயல் ஊராட்சியில் ரூ..8.50 லட்சம் மதிப்பீட்டில் நெற்களம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் அவர் பார்வையிட்டார்.

சாலை பணிகள்

புஷ்பவனம் ஊராட்சியில் உள்ள அய்யனார் கோவில் தெரு சாலையை தமிழ்நாடு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளையும், தேத்தாக்குடி வடக்கு ஊராட்சி, நெய்விளக்கு ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

இதேபோல் அகஸ்தியம்பள்ளி கிராமம் முதல் தென்னடார் கிராமம் வரை உள்ள சாலை, மருதூர் வடக்கு முதல் மருதூர் தெற்கு வரையுள்ள சாலை, தென்னம்புலம் முதல் செட்டிபுலம் வரையுள்ள சாலை ஆகிய சாலைகளை பலப்படுத்தும் பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

வகுப்பறைகள்

கருப்பம்புலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, செண்பகராயநல்லூர் ஊராட்சி தெற்குகாடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெறும் வகுப்பறை கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார். அப்போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சேகர், வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜூ, பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story