மேற்குவங்கத்தில் நடைபெற்ற 'கிக் பாக் சிங்' போட்டியில் கோவை மாணவர் வெற்றி...!
கிக் பாக் சிங் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இத்தாலியில் நடைபெறும் உலக அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.
துடியலூர்,
வெக்கோ இந்தியா கிக் பாக்சிங், மேற்கு வங்க விளையாட்டு மற்றும் கிக் பாக்சிங் சங்கம் சார்பாக தேசிய அளவிலான ஜீனியர்ஸ் கிக் பாக்சிங் போட்டி மேற்கு வங்காள மாநிலத்தில் காடந்த 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, ஜார்கண்ட், டெல்லி போன்ற இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
தமிழகம் சார்பாக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் அபிசேக் பல்வேறு சுற்றுகளில் சிறப்பாக விளையாடி இறுதி சுற்றில் டெல்லி அணி வீரரை தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல் கோவை மாணவர் மிதுன் வெள்ளிப் பதக்கம் வென்றார். தங்கப்பதக்கம் வென்ற மாணவர் அபிசேக் கூறும்போது,
இப்போட்டிகளுக்காக கடந்த ஒரு மாதமாக கடுமையாக பயிற்சி மேற்கொண்டதாகவும், இதன் காரணமாக இப்போட்டியில் தங்கம் வென்றுள்ளாதாகவும், இப்போட்டியில் வென்றதன் மூலம் வரும் அக்டோபரில் இத்தாலி நாட்டில் நடைபெறும் உலக அளவிலான கிக் பாக்சிங் போட்டிக்கு தேர்வாகியுள்ளதாகவும், இத்தாலியில் நடைபெறவுள்ள இப்போட்டியில் கலந்து கொள்ள தமிழக அரசு உதவி செய்தால் அந்தப் போட்டியிலும் வெற்றி பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன் என தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் கிக் பாக் சிங்கில் வெற்றி பெற்று கோவை வந்த அபிசேக் மற்றும் மிதுன் ஆகியோருக்கு பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் மாலை அணிவித்து மேள தாளத்துடன் கேக் வெட்டி கொண்டாடி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.