ஆவடியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


ஆவடியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x

ஆவடியில் போக்குவரத்துக்கு வசதி ஏற்படுத்தி தராமல் மழைநீர் கால்வாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 43-வது வார்டு வசந்தம் நகர் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நகரை ஒட்டி சந்திரா சிட்டி, கோத்தாரி கார்டன் உள்ளிட்ட பகுதிகளும் உள்ளன. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

வசந்தம் நகர் வழியாக அயப்பாக்கம் ஏரிக்கு மழைநீர் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது.

இதற்காக சாலையின் நடுவே ஏற்கனவே இருந்த கால்வாய் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுத்து போட்டுவிட்டு கால்வாய் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் சென்றுவர பாதை இல்லாமல் முதியவர்கள் , பெண்கள் உள்பட அனைத்து தரப்பு பொதுமக்களும் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவடி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அந்த பகுதி பொதுமக்கள் நேற்று மாலை வசந்தம் நகர் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த ஆவடி போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போக்குவரத்து வசதிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story