நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

அரசுக்கு சொந்தமான இடத்தை போலி பட்டா மூலம் பத்திரப்பதிவு செய்ததாக புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

போலி பட்டா

இலுப்பூர் தாலுகா புங்கினிப்பட்டி கிராமம் பாப்பாங்குடி பகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மனைப்பிரிவு உருவாக்கப்பட்டு பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது. முதல் கட்டமாக 58 பயனாளிகளுக்கும், அதனை தொடர்ந்து 12 பயனாளிகள் என கூடுதலாக 70 பயனாளிகளுக்கு மனைப்பட்டா வழங்கப்பட்டிருந்தது. இதே மனைப்பிரிவில் பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்துள்ள காலி இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து போலி பட்டா தயார் செய்து, பத்திரப்பதிவு செய்துள்ளதாக புகார் எழுந்தது.

சாலை மறியல்

இதனால் அதிர்ச்சியடைந்த மனைப்பிரிவு பட்டா உரிமையாளர்களும், புங்கினிப்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகமும் பல முறை அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்து காத்திருந்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த புங்கினிப்பட்டி ஊராட்சி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் இலுப்பூர் பஸ் நிலையம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையறிந்த இலுப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமலதா, இலுப்பூர் துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் ஜமுனா, இலுப்பூர் தாசில்தார் வெள்ளைச்சாமி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதன் முடிவில் புகார் மனு பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story