போதை பொருள் விற்பனை கும்பலுக்கு போலீசார் உடந்தையாக இருந்தால் கடும் நடவடிக்கை - சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை


போதை பொருள் விற்பனை கும்பலுக்கு போலீசார் உடந்தையாக இருந்தால் கடும் நடவடிக்கை - சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
x

சென்னையில் போதை பொருட்கள் விற்பனை கும்பலுக்கு போலீசார் உடந்தையாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை

சென்னை:

தமிழகத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாக போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் போதை பொருட்களை ஒழிப்பது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று முன்தினம் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் சென்னையில் போதை பொருட்கள் ஒழிப்பது குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கிய அறிவுரைகள் வருமாறு:-

சென்னையில் போதை பொருள் ஒழிப்புக்கான சிறப்பு சோதனையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க சென்னை எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு ஆளாகுவதை தடுக்க பள்ளி-கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அருகே தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். போதை பொருட்களை கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அவர்களுடைய சொத்துக்களை முடக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வெண்டும்.

போதை பொருட்கள் விற்பனை கும்பலுக்கு போலீஸ் அதிகாரிகள், போலீசார் யாரேனும் உடந்தையாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதை பொருட்களின் தீங்கு, விளைவுகள் குறித்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, அன்பு, இணை கமிஷனர்கள் ரம்யா பாரதி, ராஜேஸ்வரி உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.


Next Story