பண்ணாரி சோதனை சாவடி அருகே மரத்தில் உட்கார்ந்திருந்த சிறுத்தை; நேரில் பார்த்த போலீசார் அதிர்ச்சி
பண்ணாரி சோதனை சாவடி அருகே மரத்தில் உட்கார்ந்திருந்த சிறுத்தை; நேரில் பார்த்த போலீசார் அதிர்ச்சி
பவானிசாகர்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டது பண்ணாரி வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் புள்ளிமான்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகிறது. இதனால் இங்கு சிறுத்தைகளும் அதிகமாக வசிக்கின்றன. கடந்த 19-ந் தேதி பகல் நேரத்தில் பண்ணாரி போலீஸ் சோதனை சாவடி அருகே தார் ரோட்டை சிறுத்தை கடந்து செல்லும் வீடியோ அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனால் பண்ணாரி போலீஸ் சோதனை சாவடி மற்றும் வனத்துறை சோதனை சாவடியில் பணிபுரியும் அதிகாரிகள் ஒருவித பயத்துடன் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் பண்ணாரி போலீஸ் சோதனை சாவடி பின்புறம் உள்ள மரத்தின் கிளையில் சிறுத்தை ஒன்று சாதாரணமாக உட்கார்ந்திருந்தது. இந்த காட்சியை கண்டதும் அங்கு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்குள்ள அறைக்குள் சென்று சிறுத்தையின் நடவடிக்கையை கண்காணித்தபடி இருந்தனர். சோதனை சாவடி பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.